காயல்பட்டினம் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான - இரண்டாம் குடிநீர் திட்டத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் இன்று துவக்கி வைத்தார். அதே நேரத்தில் பொன்னன்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகர பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
இன்று - நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த விழாவில், திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களின் - 235 கோடியே 61 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்டுள்ள - 1098 திட்டப்பணிகளை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்து உரையாற்றினார்.
ஏறத்தாழ 30 கோடி ரூபாய் மதிப்பிலான - காயல்பட்டினம் நகராட்சியின் இரண்டாம் குடிநீர் திட்டமும் அதில் அடங்கும். இத்திட்டத்தின் மூலம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பொன்னன்குறிச்சி அருகிலிருந்து, 27 கிலோ மீட்டர் அளவுக்குப் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம், காயல்பட்டினத்திற்கு நேரடியாகக் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றிலிருந்து காயல்பட்டினம் உயர்நிலை தொட்டிகள் வரை குடிநீர் கொண்டு வரும் பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளன. அப்பணிகளே - இன்று, தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் அரசு விழா நடந்துகொண்டிருந்த அதே வேளையில், பொன்னன்குறிச்சியிலும் - நகராட்சி சார்பாக சிறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், நகராட்சியில் புதிதாகப் பொறுப்பெற்றுள்ள ஆணையர் பி.பொன்னம்பலம் உட்பட பல நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள், அங்கத்தினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இத்திட்டப்படி, நகரிலுள்ள பழைய இல்ல இணைப்புகள் (HOUSE SERVICE CONNECTIONS) அகற்றப்பட்டு, புதிய இணைப்புகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்படவேண்டும். இதுவரையிலும் நிறைவடையாத இப்பணிகளை வேகப்படுத்தக் கோரி, “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக - அரசுக்கு மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |