வெகு நாட்களாகப் பழுதுபட்ட நிலையிலிருந்த தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் காயல்பட்டினம் வழித்தடத்தில் - தமது கோரிக்கையைத் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளமைக்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் - சென்னையிலுள்ள தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறையின் முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சனுக்கு நேரில் நன்றிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதோடு, கூடுதலாக சில வேகத்தடைகளை அமைத்துத் தருமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் தாயிம்பள்ளி சந்திப்பு, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சந்திப்பு ஆகிய பகுதிகளில், நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையிலிருந்த - நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சாலையைப் புனரமைக்க – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தொடர் மனுக்களை வழங்கி வந்தது.
நிர்வாக ஒப்புதலுக்குக் காத்திருப்பதாக பதில்கள் தொடர்ந்து பெறப்பட்ட நிலையில், இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையின் அரசு முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் IAS இடம், “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக 01.02.2017. அன்று சென்னையில் கோரிக்கை மனு நேரில் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக, தற்போது அப்பகுதியில் சாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
[படங்கள்: கோப்பு]
வேகமாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத் துறை செயலருக்கு - “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக நேற்று (06.03.2027.) நன்றிக் கடிதம் - சென்னை தலைமை செயலகத்தில் நேரில் வழங்கப்பட்டது.
மேலும், தாயிம்பள்ளி சந்திப்பில் கூடுதலாக ஒரு வேகத்தடையும், ஷெய்கு ஹுசைன் பள்ளியருகில் ஒரு வேகத்தடையும் அமைத்திட - தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவுக்கும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கும் (தமிழக முதல்வர்) கோரிக்கை மனுக்கள் சென்னையில் நேற்று வழங்கப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |