காயல்பட்டினம் நகராட்சிக்கு நேர்மையான - முழுநேர ஆணையரை நியமிக்கக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் - சென்னையிலுள்ள அரசு முதன்மைச் செயலர், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) ஆகியோருக்கு நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் நகராட்சி உட்பட மாநிலத்தின் சுமார் 20 நகராட்சிகளில் முழு நேர ஆணையர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அந்நகராட்சிகளின் மேலாளர்களே பொறுப்பு ஆணையர்களாக செயல்படுகின்றனர்.
அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, பொறுப்பு ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்ட மேலாளர்களே, தனி அலுவலர்களாகவும் செயலாற்றி வருகின்றனர்.
ஒரு நகராட்சியின் மேலாளருக்கு என சில பொறுப்புகள் உள்ளன. அவரே தற்போது ஆணையர் பொறுப்பையும், மன்றத்தின் பொறுப்பையும் செய்வதால், காயல்பட்டினம் உட்பட மாநிலத்தின் பல்வேறு நகராட்சிகளில் - குடிநீர் விநியோகம், சாலைகள் புனரமைப்பு உட்பட பல்வேறு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் நகராட்சிக்கு நேர்மையான, முழு நேர ஆணையரை உடனடியாக நியமனம் செய்யக்கோரி, சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி IAS, நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் கோ.ப்ரகாஷ் IAS ஆகியோரிடம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நேரில் மனு வழங்கப்பட்டுள்ளது.
|