நகரில் குப்பைகளை அள்ள கட்டணம் (USER FEE) வசூலிக்கக் கூடாது என காயல்பட்டினம் நகராட்சியிடம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
குப்பைகளை அகற்ற அனைத்து வீடுகளிலிருந்தும் கட்டணம் (USER FEE) வசூல் செய்ய - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (COMMISSIONER OF MUNICIPAL ADMINISTRATION; CMA) - தமிழகத்திலுள்ள அனைத்து நகராட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இக்கட்டணத்தை விதிக்க, மத்திய அரசு நிறைவேற்றியுள்ள Solid Waste Management Rules 2016 விதிமுறைகளை - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA), அக்கடிதத்தில் மேற்கோள் காண்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரின் கடிதத்தைத் தொடர்ந்து, குப்பைகளை அள்ளுவதற்குக் கட்டணம் வசூலிக்க - இராஜபாளையம் நகராட்சி உட்பட பல நகராட்சிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் “நடப்பது என்ன?” குழுமம் அறிந்தது.
இதனை தொடர்ந்து,
குப்பைகளை அள்ளுவது - உள்ளாட்சி மன்றங்களின் அடிப்படை சேவைகளில் ஒன்று; இதற்குப் புதிதாக கட்டணம் நிர்ணயம் செய்ய அவசியம் இல்லை என்றும்,
மத்திய அரசு சட்டம் - இதுகுறித்த முடிவை ஒவ்வொரு நகராட்சியும் எடுக்க அதிகாரம் கொடுத்துள்ள நிலையில்,
மக்கள் பிரதிநிதிகள் கொண்டுள்ள உள்ளாட்சி மன்றங்கள் இல்லாத சூழலில்,
தனி அலுவலர்கள் தன்னிச்சையாக இதுகுறித்த முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் காயல்பட்டினம் நகராட்சியில் நேற்று (09.03.2017. வியாழக்கிழமை) மனு வழங்கியுள்ளனர்.
அதன்போது, தொடர்பான ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும், நாளிதழில் விளம்பரம் வெளியிட உள்ளதாகவும் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே பல்வேறு வரிகளை அரசுக்குச் செலுத்தி வரும் பொதுமக்களுக்குப் பளுவாக, மற்றொரு புதிய வரியைச் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, இதுகுறித்து பொதுமக்களிடம், விரிவான விழிப்புணரவு பரப்புரையை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மேற்கொள்ளவுள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
|