காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள குருசடிக்கு, சட்டத்திற்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை ரத்து செய்யக் கோரி “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் தமிழக அரசு தலைமைச் செயலர், எரிசக்தி செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரைப் பகுதியில், கடற்கரைப் பூங்காவிற்கு வடகிழக்கே - கிறிஸ்துவ வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. CRZ உட்பட பல்வேறு விதிமுறைகளை மீறி அரசு நிலத்தில், மாவட்ட ஆட்சியர், நகராட்சியின் அனுமதி பெறப்படாமல் நடைபெற்று வரும் இக்கட்டுமானங்கள் தொடர்பாக - முழு விபரங்கள், மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்கு – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான இக்கட்டுமானத்திற்கு, 07 364 002 0925 என்ற எண்ணிலான மின்னிணைப்பு, PARISH PRIEST, St.Antony Curuzadi, Singi Durai, Kayalpattnam என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளதாக நடப்பது என்ன? குழுமம் அறிகிறது.
மேலும் - இந்த இணைப்பு பெற, முன்காப்பீடு பத்திரம் (INDEMNITY BOND) மட்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்காப்பீட்டுப் பத்திரம் பெற்று இணைப்புகள் வழங்குவது - சட்டத்திற்கு புறம்பாக, உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள, தமிழக அரசின் அரசாணை தடைசெய்துள்ள - ஒரு புறம்போக்கு நிலத்தில் நடைபெறும் மதரீதியான கட்டுமானத்திற்குப் பொருந்தாது.
எனவே, இந்த மின் இணைப்பை உடனடியாக ரத்து செய்ய கோரி, சென்னையிலுள்ள - தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் IAS, எரிசக்தித் துறையின் அரசு முதன்மைச் செயலர் விக்ரம் கபூர் IAS, தமிழ்நாடு மின்வாரியத் துறை தலைவர் & நிர்வாக இயக்குநர் முனைவர் ம.சாய்குமார் IAS, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|