காயல்பட்டினம் “நடப்பது என்ன?” குழும ஒருங்கிணைப்பில், நகரின் 4 இடங்களில் குடும்ப அட்டை குறைகள் தொடர்பான முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 493 பேர் பங்கேற்றுப் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
பொதுமக்களின் குடும்ப அட்டைகளிலுள்ள குறைகள் தொடர்பான முகாம், 26.03.2017. ஞாயிற்றுக்கிழமையன்று,
(1) ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) (“நடப்பது என்ன?” அலுவலகம் அருகில்), பேருந்து நிலையம் எதிரில்
(2) ரெட் ஸ்டார் சங்கம் (அப்பா பள்ளித் தெரு)
(3) காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு (பெரிய குத்பா பள்ளி வளாகம்)
(4) அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் (சதுக்கைத் தெரு)
ஆகிய 4 இடங்களில், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் நடத்தப்பட்டது.
>>> குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் அரசு இணையதளத்தில் இடம்பெறாதது குறித்தும்,
>>> நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்கிய பின், உடனடியாக அவரவர் கைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் (SMS) வரவில்லையெனில் அது குறித்தும்,
>>> குடும்ப அட்டைதாரரிடம் ஒரேயொரு காஸ் சிலிண்டர் மட்டும் இருக்க, அரசு இணையத்தில் “இரண்டு சிலிண்டர்கள்” என தவறாகப் பதிவு இருந்து, அதன் காரணமாக அவர்களுக்கு மண்ணெண்ணெய் மறுக்கப்படுவது குறித்தும்
நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டன. 4 முகாம்களிலும் மொத்தமாக 493 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரரிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன.
பொதுமக்கள் சரியான தகவல்களை அரசுக்கு அளித்துள்ள நிலையிலும் - அரசு இணையதளத்தில் பெரும்பாலான பொதுமக்களின் விபரங்கள் தவறாகப் பதிவிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்களின் அலைச்சல் உள்ளிட்ட சிரமங்களைத் தவிர்க்கும் நோக்குடன் இம்முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து மொத்தமாகப் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெற்ற ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் – பிள்ளை லெப்பை, எம்.ஏ.காழி அலாவுத்தீன், உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாஈல், கலாமீ யாஸர் உள்ளிட்டோரும்,
ரெட் ஸ்டார் சங்கத்தில் - காஸிம், ரியாஸுத்தீன், ஜியா, ரிஸ்வீ, முஹம்மத் முஹ்யித்தீன், எஸ்.எம்.எஸ்.மதார் உள்ளிட்டோரும்,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பில் - அதன் தலைவர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் தலைமையில், கே.எம்.என்.உமர் அப்துல் காதிர், எஸ்.எம்.ஏ.ஷேக் முஹம்மத் ஸாலிஹ், இசட்.ஏ.முஹம்மத், மொகுதூம் முஹம்மத் உள்ளிட்டோரும்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தில் - அதன் துணைச் செயலாளர் பிரபு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில், பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களான ஜெ.எஸ்.ஸதக் ஷஃபீக், எஃப்.ஆர்.முஹம்மத் உமர், டீ.எம்.ஐ.முஹம்மத் அப்துல்லாஹ், எஸ்.எஸ்.செய்யித் இப்றாஹீம், கே.எஸ்.எல்.முஹம்மத் தாஹா உள்ளிட்டோரும் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|