சுற்றுச்சூழலுக்குக் கேட்டை உண்டாக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, காயல்பட்டினம் உட்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதற்கான கோரிக்கை வலுப்பெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சி சார்பிலும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பிலும் – சீமைக் கருவேல மர அகற்றத்தை வலியுறுத்தி அரசுக்குக் கோரிக்கை மனுக்களும் அளிக்கப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக, அவற்றை அகற்றும் பணிகளும் துவக்கப்பட்டு ஓரளவுக்கு செயல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொய்வு கண்டுள்ளது.
“இந்நிலையில், சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் தேவை” என, நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் - மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளருமான எம்.தமீமுன் அன்ஸாரீ சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். அவரது உரை விபரம்:-
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே ...
நான் எனது கன்னிப் பேச்சிலே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பேசினேன். நிலத்தடி நீரை உறிஞ்சி, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என பேசியிருந்தேன் .
தற்போது மதிமுக தலைவர் திரு.வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது.
பல இடங்களில், நகரங்களில் அப்பணிகள் நடைபெறுகிறது. எனினும் இதற்காக ஒரு சட்டத்தை இயற்றி தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கினால் கேராளாவைப் போல தமிழ்நாடும் 100 சதவீதம் கருவேல மரங்கள் அற்ற மாநிலமாக மாறும்.
இதற்கு பகரமாக பழம் தரும், நிழல் தரும் மரங்களை நட்டு தமிழ்நாட்டின் பசுமையை வளர்க்கலாம் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இவ்வாறு சட்டப்பேரவையில், உறுப்பினர் எம்.தமீமுன் அன்ஸாரீ பேசினார்.
தகவல்:
N.A.தைமிய்யா
|