வரலாற்றுப் புகழ்மிக்க காயல்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றும், காயல்பட்டினம் கடற்கரையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் - கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசியுள்ளார். அவரது உரை வருமாறு:-
மாண்புமிகு பேரவை துணைத் தலைவர் அவர்களே,
நிதிநிலை அறிக்கை குறித்த பொது விவாதத்தில் பேசுவதற்கு வாய்ப்பளித்த உங்களுக்கும், புதிதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்ககூடிய முதல்வர் அவர்களுக்கும், கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய அண்ணன் திரு கே.ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கும், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கக் கூடிய நிதியமைச்சர் அவர்களுக்கும், தமிழகத்தினுடைய மக்களால் அன்போடு தளபதியார் என அழைக்கப்படும் எதிர்கட்சி தலைவர் அனைத்து நிலைகளிலும் அனைத்து பணிகளையும் ஜல்லிக்கட்டிலிருந்து ரேஷன் கடை வரை உள்ள அனைத்து போராட்டங்களையும் தளபதியாக எடுத்துச் சென்றிருக்கக் எதிர்கட்சி தலைவர் அவர்களுக்கும் நான் சார்ந்திருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பாக முதலிலே வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நிதிநிலை அறிக்கையில் ஐந்து இயக்கங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் ஆதாரம் மேலாண்மை, வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கு வீட்டு வசதி, திறன் மேம்பாடு, தூய்மை தமிழ்நாடு என ஐந்து இயக்கங்களும் அதற்கான பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த திட்டங்கள் எல்லாம் மக்களை சென்றடையக்கூடிய வகையிலே ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
புதிய நீர் மேலாண்மை கொள்கை
நீர் ஆதார மேலாண்மையை பொறுத்தவரை தென் மாவட்டங்களிலே திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்பெறக்கூடிய வகையிலே புதிய நீர் மேலாண்மை கொள்கை ஒன்றை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுடைய குடிநீர் தேவை, விவசாய பணிகளுக்கும் தாமிரபரணி ஆற்று நீர் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நதிநீரை பாதுகாத்து வழங்கிட புதிய நீர் மேலாண்மை கொள்கை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்தி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
எனது தொகுதி கடையநல்லூரை பொறுத்த வரை கடையநல்லூர் நகராட்சியிலேயே ஒரு லட்சம் மக்கள் வாழ்கின்றார்கள். அங்கே குடிதண்ணீர் பிரச்சினைதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. அதற்கு கடந்த ஒன்பது மாத காலத்தில் பல்வேறு நிலைகளில் அரசினுடைய அமைச்சர் பெருமக்களையும், அதிகாரிகளையும், மற்றவர்களையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி ஒரு சில பணிகள் நடைபெற்றிருந்தாலும் கூட அடிப்படையாக இருக்கக்கூடிய பணிகளை நிறைவு செய்வதற்குண்டான ஆக்கப்பூர்வமான பணிகள் முழுமை பெறவில்லை என்பதை இங்கே வருத்தத்தோடு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன்.
நகராட்சியின் அலட்சியம்
இங்கு ஏற்கனவே பழைய பைப் லைன் இருக்கின்றது. புதிய பைப் லைனும் போட்டியிருக்கிறார்கள். சில பகுதிகளுக்கு தண்ணீர் அதிகமாக செல்கிறது. பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. எனவே புதிய பைப் லைனை முழுமையாக முடித்து தர வேண்டும் என்ற வேண்டுகோளை அங்கே வைத்தபோது நான்கு மாதத்திற்கு முன்பாக நானூறு கன்னெக்ஷன்தான் கொடுக்க வேண்டியிருந்தது. அதை விரைவாக கொடுத்து விடுங்கள் என்று சொன்னேன். நகராட்சினுடைய ஆணையாளரிடத்திலே நானே சென்று பலமுறை வலியுறுத்தினேன். இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்று சொன்னார். நானூறு பேர் கட்டணத்தை செலுத்தவில்லை என்று சொன்ன போது அந்த லிஸ்டை கொடுத்தால் நானே வாங்கி தருகிறேன் என்று சொன்னேன். ஒரு லிஸ்டை கொடுத்தார். அதிலே பார்த்தால் 75 சதவீதம் பேர் புதிய பைப் லைன் கன்னெக்ஷனுக்கு நிதியை செலுத்தி விட்டார்கள். அங்குள்ள பிரச்சினை என்னவென்று சொன்னால் தண்ணீர் வருகின்றது. சரியான முறையிலே பங்கீடு செய்யவில்லை. இதிலே மூன்று நிர்வாக துறைகளும் அங்கே ஒருங்கிணைந்த முறையிலே செயல்பட்டால்தான் இந்த தண்ணீர் பஞ்சத்தை அங்கே போக்க முடியும். பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி என மூன்று நிர்வாகங்களும் ஒருங்கிணைந்த முறையிலே செயல்பட்டால் ஓரளவுக்கு தண்ணீர் பஞ்சத்தை அங்கே போக்க முடியும். அதற்குண்டான ஒரு தெளிவான அறிக்கையை இங்கிருந்தே நீங்கள் அந்த நகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்தி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.
புதிய ஆழ்துளை கிணறுகள்
அதே போல எங்களுடைய கருப்பா நதி பகுதியிலே புதிய ஆழ்துளை கிணறு ஏற்கனவே ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டு ஆழ்துளை கிணறுகளையாவது உருவாக்கினால் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கூடிய வகையிலே பணிகளை செய்ய முடியும். அதே போல செங்கோட்டை, கண்ணுபுள்ளிமெட்டு அணைக்கட்டுக்கு மேலே தண்ணீர் இருக்கின்றது. அந்த தண்ணீரை பைப் லைன் மூலமாக செங்கோட்டைக்கு கொண்டு வந்தால் செங்கோட்டை நகராட்சி பகுதி மக்களுடைய தண்ணீர் பற்றாக்குறையை முழுமையாக போக்க முடியும் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு பைப் லைன்தான் அங்கிருந்து போட வேண்டும். அந்த பைப் லைன் போட்டாலே அந்த பகுதி தண்ணீர் பிரச்சினையெல்லாம் தீர்ந்துவிடும்.
இதை போலவே அடவி நயினார், குண்டாறு அணையை ஆழப்படுத்தக்கூடிய வகையில் பணிகளையும் செய்தால் ஓரளவிற்கு தண்ணீர் பிரச்சினை தீர்க்க முடியும். மோட்டை அணையையும் சீர் செய்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையில் பணிகளை செய்ய முடியும் என்பதையும் இங்கே தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
தூய்மை கடையநல்லூர் இயக்கம்
தூய்மை தமிழ்நாடு பற்றி நமது நிதிநிலை அறிக்கையிலேயே சொல்லப்பட்டிருக்கின்றது. கடையநல்லூரை பொறுத்தவரை சுகாதார கேட்டினுடைய அபாயத்தினுடைய விளிம்பிலே இருக்கின்றது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்று சொன்னால் சென்ற ஆட்சியிலே அறிவிக்கப்பட்ட பாதாள சாக்கடைத்திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குடிதண்ணீரும் சாக்கடையும் கலக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. கடையநல்லூரை பொறுத்தவரையில் பல்வேறு நிலைகளிலே பன்றிக்காய்ச்சல், அதற்கு முன்பாக டெங்கு காய்ச்சல் அபாயங்கள் உச்சத்திலே இருக்கின்றது. நான் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சரிடத்திலே தொடர்பு கொண்ட பின்னர் ஒரு சில நடவடிக்கைகளையெல்லாம் அவர்களும் வேகப்படுத்தினார்கள். இருந்தாலும் கூட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்குள்ள கால்வாய்களையெல்லாம் சுத்தம் செய்ய வேண்டும் என்று நிதி ஒதுக்கியும் கூட அந்த நிதியை முழுமையாக பயன்படுத்த முடியாத அளவிற்குதான் அங்குள்ள நகராட்சி நிர்வாகம் இருக்கின்றது. எந்த அளவிற்கு என்று சொன்னால் என்னுடைய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்கக்கூடிய அந்த கால்வாயைக்கூட முழுமையாக சுத்தம் செய்யப்படாததன் காரணமாக தண்ணீர் எல்லாம் வெளியே வந்து துர்நாற்றமும், கொசுத்தொல்லையும் என்னுடைய அலுவலகத்தை சூழ்ந்துள்ளது. இதை பலமுறை அங்குள்ள ஆணையாளரிடத்தில் சொல்லியும் கூட அவர் எதையும் கேட்பதாக இல்லை. இதன் மூலமாக அரசாங்கம் சில நடவடிக்கைகள் எடுக்கின்றது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நானும் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றேன்.
அருமையான அமைச்சர் பெருமக்கள் எல்லாம் இங்கே இருக்கக்கூடிய சூழ்நிலையிலே அதைக்கண்டறிந்து குடிதண்ணீர் பிரச்சினை, கொசுத்தொல்லை என்பது அங்கே மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.எனவே இதை கருத்தில் கொண்டுதான் எப்படி இங்கே தூய்மை தமிழ்நாடு இயக்கம் அறிவிக்கப்பட்டிருக்கின்றதோ அதைப்போல ஒரு மாரத்தான் ஓட்டம் """"தூய்மை கடையநல்லூர் இயக்கம்"" என்ற ஒரு இயக்கத்தை அங்கே துவங்கி இளைஞர்களையெல்லாம் பயன்படுத்தி அவர்கள் கூட அந்த பணிகளையெல்லாம் செய்வதற் குண்டான முயற்சி நடக்கின்றது. இருந்தாலும் அதனுடைய அடிப்படையில்தான்
சபாநாயகர் நிறுத்த சொல்கிறார்
நான் இன்று ஒருநாள் தான் பேசுகிறேன். நீங்கள் அங்கீகரித்துள்ள நான்கு கட்சிகளில் நானும் ஒரு கட்சி ஒரு நாள் கூட பேசவிட மாட்டேன் என்கிறீர்கள்.
பட்ஜெட் பற்றி பேசவேண்டும், தொகுதி பற்றி பேச வேண்டும், சமுதாயத்தை பற்றி பேச வேண்டுமா இல்லையா. அதற்குள் இல்லை என்றால் என்ன அர்த்தம் ஒருநாள்தாள் பேச வாய்ப்பு தருகிறீர்கள். அப்போது பேசுவதற்கு நேரம் கொடுக்க மாட்டேன் என்கிறீர்களே. தயவு செய்து முழுமையாக பேசுவதற்கு கொஞ்சம் ஒத்துழைப்பு தாருங்கள்.
நான் சொல்வதில் ஏதேனும் குற்றச்சாட்டு சொல்கிறேனா? அரசாங்கத்திற்கு நன்மையான விஷயங்களை சொல்கிறேனா, இல்லையா? தயவு கூர்ந்து அனுமதியுங்கள். அந்த பகுதியை தூய்மையாக வைப்பதற்குண்டான கருத்துக்களையும், கோரிக்கைகளையும் நான் அவையின் முன் வைக்க வேண்டும்.
கேரளாவில் இருந்து குப்பை
கேரளாவில் குப்பைகளை அங்கே கொட்ட முடியாத காரணமாக கேரள, தமிழ்நாடு எல்லையில் என் தொகுதி இருக்கின்றது. இரவு நேரங்களில் செக் போஸ்ட் வழியாக கேரளாவிலிருந்து குப்பைகளையெல்லாம் இந்த பகுதியில் கொட்டுகின்றார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. அதையும் ஆய்வு செய்து அதை தடுக்கக்கூடிய முயற்சிகளல் நம்முடைய அரசு ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்ல கடைப்பட்டிருக்கின்றேன்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை
அதே போல என்னுடைய தொகுதியிலே புளியரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பெண் மருத்துவர்கள் இல்லை. பெண் மருத்துவர்கள் அங்கு இல்லை என்று சொன்னால் பேருகாலத்தில் எப்படி பிரசவம் பார்க்க முடியும்? எனவே தயவு கூர்ந்து ஒரு பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும்.
இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கூடிய முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் அதைப்போல எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் தோப்பூர் என்ற பகுதியில் அதைப்பதற்குண்டான திட்டம் ஏற்கனவே இருந்தது. அந்த பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் எட்டு மாவட்டங்கள் பயனடையும். தமிழ்நாட்டினுடைய மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் மதுரைக்கு அந்த பக்கத்தில்தான் இருக்கிறார்கள்.
எனவே கண்டிப்பாக ஆய்வு செய்திருக்கக்கூடிய மதுரை தோப்பூரிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்குவதற்கு இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்தி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.
தாலுகா அலுவகம்
அதே போல மறைந்த மாண்புமிகு முதல்வர் அவர்கள், ஏற்கனவே எங்களுடைய கோரிக்கைகளையெல்லாம் ஏற்று கடையநல்லூர் தாலுகா அலுவலகம் ஊரினுடைய எல்லைப்பகுதிலேயே அமைவதற்குண்டான ஆலோசனையை வழங்கியிருக்கின்றார்கள். அது சம்மந்தமாக வருவாய்த்துறை அமைச்சரிடத்திலும் சொல்லியிருக்கின்றேன். எனவே மேலும் அவர்கள் காலம் தாழ்த்தாமல் ஊரினுடைய எல்லைப் பகுதிலேயே அந்த அலுவலகம் அமைவதற்குண்டான திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதையும் நான் இங்கே பணிவோடு உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
சிறுபான்மையினர் நலன்
நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினர் நலன் கடைசியாக 139வது பொருளாக சேர்க்கப்பட்டிருக் கின்றது. அதில் 2017-2018ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினர் நலனுக்காக எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பதை மன வேதனையோடு இங்கே பதிவு செய்கின்றேன். நீங்கள் அறிவித்திருக்கக்கூடிய உலமா பென்ஷன் சென்ற வருடம் அறிவிக்கப்பட்டது.
(துணை சபாநாயகர் குறுக்கீடு)
மாண்புமிகு பேரவை துணைத்தலைவர் அவர்களே!
இங்கு அமைச்சர்கள் குறிப்பிட்டதை நான் செய்யவில்லை என்று சொல்லவில்லை. நான் இதையெல்லாம் செய்யவில்லை என்று சொன்னேனா? தற்போதைய நடவடிக்கை பற்றி பேசுங்கள். நான் இப்போது சொன்தை அன்றே நிதியமைச்சர் அவர்களிடம் நானும், தமீம் அன்சாரி அவர்களும் சொன்னோம். இந்த நிதியாண்டில் நீங்கள் அறிவித்திருக்கக்கூடிய இரண்டே விஷயங்கள் உலமா பென்ஷன் சென்ற ஆண்டே அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது இன்னும் கொடுக்கப்படவில்லை, திரும்பவும் அது இந்த நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
இரண்டாவது ஹஜ்ஜுக்கு உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். ஹஜ்ஜுக்கு உதவி செய்வது மத்திய அரசாங்கம். நான் திரும்பவும் சொல்ல வந்ததை விட்டு விட்டீர்கள். இப்போது உர்து மொழி பற்றி சொன்னார்கள். அதைப்பற்றி நான் சொல்ல வந்தேன். அதற்கிடையில் பேச்சை வழி மறித்து விட்டார்கள். உர்து மொழியில் அன்றைக்கு தேர்வு எழுத முடியாத ஒரு சூழ்நிலை இருந்த போது மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை நான் தொடர்பு கொண்டேன். ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தார்கள். அதை நான் பாராட்டுகிறேன். இல்லை என்று நான் சொல்லவில்லை. சில விஷயங்களை சொல்கின்றோம். அவர்கள் சொன்ன அன்றைக்கே நிதியமைச்சர் அவர்களும் சொன்னார்கள். ஆமாம் விடுபட்டு விட்டது. நீங்கள் சொல்லுங்கள் மற்றதையும் சேர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்த கோரிக்கையைச் சொல்கிறேன். கோரிக்கைகள் அதுதான் இப்படி என்னை பொறுத்த வரையில் சில கோரிக்கைகளை சொல்கிறேன். அவைகளை தயவு கூர்ந்து பரிசீலனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம்
முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் அது ஏற்கனவே ரிஜிஸ்டர் அண்டர் சொசைட்டி ஆக்ட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. திரும்பவும் ஏன் வருடா வருடம் புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் அந்த சங்கத்தை நடத்துபவர்களுடைய கேள்வியாக இருக்கிறது. அந்த விதிமுறையைத் தளர்வு செய்ய வேண்டும் அதற்குண்டான மேச்சிங் கிராண்ட் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார்கள் என்றால் அரசாங்கம் இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறது. அந்த நிதியை ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக சொல்கிறார்கள்
டாம்கோ மூலமாக கடன் வழங்கப்படுகிறது. அந்த கடன் கூட்டுறவு வங்கிகளில் சுவ்ரிட்டி மூலம்தான் வழங்கப்படுகிறது. அதை ஏன் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் வழங்கக் கூடாது என்பதையும் அவர்கள் கோரிக்கையாக வைத்திருக்கின்றார்கள். இப்பணிகளை விரைவாக நடத்துவதற்கான காரியங்களிலே இந்த அரசாங்கம் ஈடுபடவேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
காஜிகளுக்கு அங்கீகாரம்
காஜிகள் சட்டத்தை அங்கீகரிக்கும்அவகையில் 2016லில் நம்முடைய சிறுபான்மை அமைச்சகத்திலிருந்து ஒரு ஆணை வெளியிடப்பட்டது. பள்ளிவாசல்களில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்பவர்கள் அவர்கள் அதற்கான பதிவேட்டை பராமரித்து வருகிறார்கள். திருமண காரியங்களை பதிவு செய்தல், சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட காரியங்களையெல்லாம் செய்வதற்குத்தான் இந்த காஜிகள் என்று சொல்லக் கூடியவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் காஜிகள் நியமிக்கப் பட்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்கும் அரசாங்கம் அங்கீகாரம் கொடுத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. அவ்வளவு பெரிய சம்பளம் கொடுக்காவிட்டாலும் அங்கீகாரத்தை கொடுத்துவிட்டால் இஸ்லாமியர்கள் பதிவு செய்யக்கூடிய அந்த திருமணங்களை அரசாங்கம் ஏற்று கொண்டதாக ஆகிவிடும். இதற்குதான் அரசாங்கம் ஜி.ஒ. போட்டிருக்கின்றது. அதையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பரிசீலனை செய்வதாக சொல்லியிருக்கின்றார்கள். அதையும் கருணையுள்ளத்தோடு பரிசீலனை செய்து தேவையில்லாமல் பள்ளிவாசலில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கலைவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்.
பாங்கு ஒலிபெருக்கி
அதே போல பள்ளிவாசல்களிலே கூம்பு ஒலிபெருக்கிகள் மூலமாக தொழுகைக்கான அழைப்பு ஒரு முறைக்கு இரண்டு நிமிடம் வீதம் ஒரு நாளைக்கு ஐந்து முறை அதாவது 10 நிமிடங்கள் ஒலிக்கப்படுகின்றது. இது சம்மந்தமாக நீதிமன்ற வழக்குகள் ஏற்பட்டு அந்த விஷயம் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அப்பொழுது அதை சரி செய்தார்கள். நீதிமன்றம் அரசாங்கத்தின் அறிவுரைக்காக தற்போது எதிர்பார்த்திருக்கிறார்கள். எனவே தொடர்ந்து பள்ளிவாசல்களில் கூம்பு வடிவிலான அந்த ஒலிபெருக்கிகள் மூலமாக அழைப்பு பணிகளுக்கு நீங்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து கொள்கின்றேன்.
இடஒதுக்கீட்டில் ஆய்வு
ஏற்கனவே திமுக ஆட்சிக் காலத்தில் 15.09.2009 அண்ணா நூற்றாண்டு விழாவில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த இட ஒதுக்கீடு முறையாக மக்களுக்கு சென்றடைகின்றதா என்பதை கண்காணிப்பதற்கு ஒரு ஆய்வுக்குழுவை நியமிக்க வேண்டுமென்றகோரிக்கையும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.
மையவாடிகள் அடக்கஸ்தளங்களுக்கு பல்வேறு நிலைகளிலே அனுமதி வழங்கினாலும் அங்கே இருக்கக்கூடியவர்கள் காலதாமதம் செய்கிறார்கள். அதை நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.
சிலெட் தேர்வில் சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு நீங்கள் வழிவகை செய்ய வேண்டும்.
சிறைவாசிகள் விடுதலை
சிறைச்சாலைகளில் உள்ளவர்களுடைய விடுதலைக்காக பல்வேறு நிலைகளில் பேசி வருகின்றோம்.
நீதியரசர் இராஜேந்திர சச்சார் அவர்கள் கூட முஸ்லிம்களுடைய ஜனத்தொகையை பார்க்கும் பொழுது அதிகமானவர்கள் சிறைச்சாலைகளிலே இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். பல்வேறு நிலைகளிலே தமிழக சிறைச்சாலைகளிலே அப்பாவி முஸ்லிம்கள், இளைஞர்கள் பலர் ஆண்டு கணக்கில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்படாமல் இழுத்தடித்துக்கொண்டு செல்லப்படுவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. விசாரணை கைதிகள் பலர் எந்த குற்றச்சாட்டுகளிலும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
எனவே நிராபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தண்டனை சிறைவாசிகளை பொறுத்த வரையில் 14 வருடங்களை கடந்து விட்ட ஆயுள் சிறைவாசிகளை இந்த அரசாங்கம் மதம், ஜாதி, வழக்கு வேறுபாடுகளையெல்லாம் கடந்து அவர்களுக்கு கருணையின் அடிப்படையில் நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
குறிப்பாக கோயம்புத்தூரில் இருக்கின்ற சகோதரர் பாட்ஷா போன்றவர்கள் எல்லாம் கண்ணீர் வடிக்கக்கூடிய அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதையும் இந்த அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
வெளிநாடுவாழ் தமிழர் நலன்
ஏற்கனவே வெளிநாடுவாழ் தமிழர்களுக்கென ஒரு தனித்துறை அமைக்கப்பட்டிருந்தது அதையும் செயல்படுத்தக்கூடிய நிலையில் நாம் ஈடுபட வேண்டும் அப்பொழுதுதான் வெளிநாட்டில் பணிப்புரிய கூடியவர்கள் அவர்களுடைய பிரச்சினைகளை எளிதிலே நிறைவேற்றுவதற்குண்டான வாய்ப்பு ஏற்படும்.
ஒரு மாதத்திற்கான விடுப்பில் வருகின்றார்கள். அவர்கள் லைசன்ஸ் கூட புதுப்பிக்க முடியவில்லை. ஒரு தனித்துறை இருந்தது என்றால் அவர்கள் அந்த பணியை செய்ய முடியும். அதை போல பல்வேறு நிலைகளிலே விபத்திலே சிக்கி மரணமடையவர்களுக்கு கருணை அடிப்படையில் எல்லா மக்களுக்கும் நம் அரசாங்கம் நிதி வழங்க வேண்டும்.
தென்காசி மாவட்டம்
அதைப்போல தென்காசியை தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு நிலைகளிலே வைத்திருக்கின்றோம். 10 சட்டமன்ற உறுப்பினர்கள், 2 பாராளுமன்ற உறுப்பினர்கள், 3 மாவட்டங்கள் அருகில் இருக்கின்றன. கேரள மாநிலத்தோடு தொடர்புடையதாக இருக்கின்றது. ஆகவே தென்காசி தனி மாவட்ட ஆகக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பாரம்பரிய மருத்துவ முறையை ஊக்கப்படுத்த வேண்டும். அக்கு பஞ்சர் மாநாட்டிலே நானும், சகோதரர் தனியரசு அவர்களும் கலந்து கொண்டோம். அவர்களும் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறார்கள். அதே போல கடையநல்லூர் சித்த மருத்துவமனையிலே நிரந்தர மருத்துவரை நியமித்து தேவயைhன வசதிகளையெல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
கோவில் சுவர் கட்டுதல்
இலத்தூரில் உள்ள மதுநாத சுவாமி கோவில் தெப்பக்குளம் இடிந்து அபாயகரமான சூழ்நிலையில் இருக்கின்றது. அறநிலைத்துறை அதனை கட்டிக் கொடுக்க கேட்டுக்கொள்கிறேன். அதே போல கடையநல்லூரில் துப்பறவு தொழிலாளர்கள் இல்லம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இல்லம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் நிதி
சட்டமன்ற உறுப்பினருடைய சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 55 ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? ஆகவே தயவு கூர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுடைய சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதே போல சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் சேர்த்து மூன்று கோடி ரூபாயாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இதுவரையிலும் டெலிபோன் டவர் இல்லை. ஐ.டி. அமைச்சரிடம் சொல்லியிருக்கிறோம். அதையும் தயவு கூர்ந்து அவர்கள் கவனத்தில் கொண்டு அங்கே ஒரு ஒய்வைப் சிஸ்டம் வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நடத்தக்கூடிய கூட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடைசி நேரத்தில் தகவல் சொல்கிறார்கள். அதனால் அந்த கூட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. தொகுதினுடைய பிரச்சினைகளையும் செய்ய முடியவில்லை. எனவே மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நடத்தக்கூடிய அனைத்து கூட்டங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க கூடிய வகையிலே, முன்கூட்டியே சட்டன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காயல்பட்டினத்தில் அகழ் ஆய்வு
இறுதியாக எனது சொந்த ஊருக்கான ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைக்க விரும்புகிறேன்.
எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் திரு அனிதா ராதா கிருஷ்ணன் அவர்கள் வந்திருக்கிறார்கள். ஏற்கனவே நம்முடைய அரசாங்கம் தொல் பொருள் ஆராய்ச்சி செய்து அழகன் குளத்திலே அகழ்வாராய்ச்சி மேற்கொண்டியிருக்கின்றார்கள். நான் பிறந்த காயல்பட்டினம் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கொற்கை பகுதியிலே அமைந்திருக்கின்றது. அதைப்பற்றி பெருமையோடு (மார்கோ போலா, இப்னு பதுதா )நம்முடைய பாரத முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் எல்லாம் சிறப்பித்து சொல்லியிருக்கிறார்கள்.
எனவே காயல்பட்டினத்தையும் அகழ்வாராய்ச்சிலே உட்படுத்தி, அங்கே இருக்கக்கூடிய கடற்கரையையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு
எங்களுடைய பகுதி மக்கள் எல்லாம் காட்டுப் பன்றி, எருமை மாடு போன்ற வன விலங்குகளால் அவ்வப்போது தாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே ஏற்கனவே இருந்த சோலார் மின்வேளி அல்லது அகளியை அமைக்கக்கூடிய பணிகளிலே நம்முடைய வனத்துறை அமைச்சர் அவர்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அரசு திட்டத்தில் கோவலம், நாகூர் தர்காக்கள்
அதே போல நம்முடைய நிதிநிலை அறிக்கையில் புனித யாத்திரைகளுக்கு புத்துயிர் அளித்து ஆன்மீகத்தை ஊக்கப்படுத்துவது சசம்மந்தமாக ஒரு குறிப்பு சொல்லப்பட்டிருக்கிறது. அதிலே சில திட்டங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம்களுடைய சிறப்புக்குரிய இடமாகக் இருக்கக்கூடிய கோவலம் மற்றும் நாகூர் தர்காவையும், புனித யாத்திரை புத்துணர்வு திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த அளவுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்திருக்கின்றீர்கள். தயவு கூர்ந்து எங்களையும் ஒரு கட்சியாக மதித்து கொஞ்சம் நேரம் கொடுங்கள். நாங்களும் எங்கள் கடமையை செய்ய வேண்டும் ஒரு நாளைக்கே இவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது. இதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு தமிழக சட்டமன்ற நிதிநிலை அறிக்கை பொது விவாதத்தில் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.
இதற்கு நிதியமைச்சர் டி. ஜெயக்குமார், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் ஆகியோர் விளக்கமளித்துப் பேசினர்.
தகவல்:
‘கத்தர்’ M.N.முஹம்மத் யூனுஸ் & அப்துல் ஜப்பார் (IUML) |