கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில், காயலர் ஏற்பாட்டில் இறகுப் பந்து மைதானம் அமைக்கப்பட்டு, அதில் காயலர்கள் உட்பட ஏராளமானோர் அன்றாடம் விளையாடி வருகின்றனர். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்தவர் சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் (வயது 55). கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். புதுமை, பொதுநலனில் ஆர்வமுள்ள இவர், செலவினங்களைப் பெரிதாகக் கருதாமல் பல நல்ல திட்டங்களைத் தன்னார்வத்துடன் செயல்படுத்தி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன், இறகுப் பந்து விளையாட்டின் மீது ஏற்பட்ட காதல் காரணமாக, தன் வீட்டின் முகப்பிலுள்ள ஒரு வீட்டுத் தரையை - தன் சொந்தச் செலவில் அப்படியே இறகுப் பந்து மைதானமாக அமைத்துவிட்டார்.
அன்றாடம் அதிகாலையில் துவங்கி 08.00 மணி வரை இம்மைதானத்தில் இறகுப் பந்தாட்டம் நடைபெற்று வருகிறது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஏராளமானோரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் – முஸ்லிமல்லாதோர் பலரும் இதில் விளையாடி வருகின்றனர்.
40 வயதை அடைந்து விட்டாலே முதுமையடைந்துவிட்டதாகப் பலர் கருதும் இக்காலகட்டத்தில், 55 வயதான சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் – மாணவர்கள், இளைஞர்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில் தானும் அன்றாடம் இம்மைதானத்தில் விளையாடி வருகிறார்.
தன்னுடமையில் இருக்கும் இடங்களையெல்லாம் வெறும் கட்டிடங்களாகவும், அறைகளாகவும் பொதுமக்கள் மாற்றி வரும் இக்காலகட்டத்தில், தனது வீட்டின் முகப்பிலேயே பெரிய இடத்தை விளையாட்டிற்காக ஒதுக்கி, தானும் பயன்பெற்று, அனைவரும் பயன்படுத்தவும் இவர் வழிவகை செய்திருப்பது பாராட்டுக்குரியது.
காயல்பட்டினம் கொச்சியார் தெருவிலுள்ள அவரது இல்லத்தின் மொட்டை மாடியில், மழை நீரைச் சேமிப்பதற்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரையமைத்து, முறையான சுத்திகரிப்புடன் மழை நீரைச் சேகரித்து வருவதை காயல்பட்டணம்.காம் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. |