நேற்றிரவு நகரில் துர்வாடை வீச்சம் உணரப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய - மாநில சுற்றுச்சூழல் செயலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியருக்கு காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு, நகரில் தானியங்கி மாசு கண்காணிப்புக் கருவிகளை நிறுவவும் கோரிக்கை கோரப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினத்தில் நேற்று (22.03.2017. புதன்கிழமை) பரவலாக துர்வாடை வீச்சம் உணரப்பட்டது. இதே போன்று பல ஆண்டுகளாக நகரில் அவ்வப்போது துர்வாடை வீச்சங்கள் உணரப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், 2016 டிசம்பர் 03 அன்று இரவும் - இதே போன்ற துர்வாடை வீச்சம் நகரில் உணரப்பட்டது. இது தொடர்பாக, அந்நேரத்தில் - சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
நேற்றிரவு இந்த துர்வாடை வீச்சம் - காயல்பட்டினம் மருத்துவர் தெரு, தைக்கா தெரு, மகுதூம் தெரு, அலியார் தெரு உட்பட நகரில் பரவலாக உணரப்பட்டது.
கெட்டுப்போன முட்டையின் (ROTTEN EGG) வாடையாக இருந்தது என சிலரும், வேறு வகையான துர்வாடையாக இருந்ததாக வேறு சிலரும் “நடப்பது என்ன?” நடத்தி வரும் பல வார்டு குழுமங்களில் தெரிவித்தனர்.
இது தொடர்பான விரிவான புகார், தற்போது நடப்பது என்ன? குழுமம் சார்பாக...
^^^^ மத்திய & மாநில சுற்றுச்சூழல் செயலர்கள்,
^^^^ மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் & தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்,
^^^^ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த துர்வாடை குறித்து விசாரிக்க அம்மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலை, விதிமுறைகள்படி - காற்று மாசு கண்காணிப்பு விபரங்களை நகரின் முக்கிய பகுதிகளில் - நிகழ்வு நேரம் (REAL TIME) அடிப்படையில் பார்வைக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்நிறுவனமோ - தனது நுழைவாயிலில் மட்டுமே அதை வைத்துள்ளது.
காயல்பட்டினம் பேருந்து நிலையம் உட்பட - நகரின் பல்வேறு இடங்களில் அத்தகவல்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அம்மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.
மேலும், நகரின் பல்வேறு இடங்களில் காற்று மாசு குறித்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள, தானியங்கி கருவிகளைப் பொருத்த - தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|