காயல்பட்டினம் கோமான் நடுத்தெருவில் - ஓரிரு வாரங்களிலேயே 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, காயல்பட்டினம் அதிகாரிகளால், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி – 01ஆவது வார்டு கோமான் நடுத்தெருவில் சிறுவர், சிறுமியர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தொடர்ந்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 7 வயது சிறுமி ஒருவருக்கும், நேற்று ஒரு 7 வயது சிறுமி, ஒரு 4 வயது சிறுவன் ஆகிய இருவருக்கும் என - ஒரே பகுதியைச் சேர்ந்த மொத்தம் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் பெறப்பட்டது.
இது குறித்து, காயல்பட்டினம் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஹில்மி ஆகியோருக்கு - “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் தகவல் வழங்கப்பட்டதின் பேரில், தொடர்புடைய வீடுகள், தெரு வீதிகள் ஆகிய இடங்களில் நேற்று (23.03.2017. வியாழக்கிழமை) டெங்கு உள்ளிட்ட நோய் பரவல் தடுப்பு & ஒழிப்பு நடவடிக்கை, கொசு ஒழிப்பு புகை அடித்தல், தூய்மைப் பணிகள் நடைப்பெற்றுள்ளதாக - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கு அவ்வதிகாரிகள் படங்களுடன் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|