காயல்பட்டினத்தில் 2ஆவது நாளாக துர்வாடை வீச்சம் நேற்று உணரப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மீண்டும் முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி உறுதியளித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
22.03.2017. புதன்கிழமை இரவில், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளிலும் துர்வாடை வீச்சம் உணரப்பப்ட்டதாக புகார்கள் வந்தன. கெட்டுப்போன முட்டையின் (ROTTEN EGG) வாசனையாக இருந்தது என சிலரும், வேறு வகையான துர்வாடையாக இருந்ததாக வேறு சிலரும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நடத்தி வரும் பல வார்டு குழுமங்களில் தெரிவித்தனர்.
இது தொடர்பான விரிவான புகாரை, சுற்றுச்சூழல் துறை தொடர்பான அனைத்து அதிகாரிகளுக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அனுப்பியிருந்தது. அதற்கு பதில் அனுப்பியிருந்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.கண்ணன், இதுகுறித்து விசாரிப்பதாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, இரண்டாவது நாளாக - நேற்று (23.03.2017. வியாழக்கிழமை) மாலை முதல் தொடர்ந்து அதே துர்வாடை வீச்சம், நகர் முழுவதும் உணரப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்தும் - சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து அதிகாரிகளுக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக மீண்டும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|