காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஏற்பாட்டில் - “நடப்பது என்ன?” குழும ஒருங்கிணைப்பில், கோமான் தெருவில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 1000 பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி 01ஆவது வார்டுக்குட்பட்ட கோமான் தெரு பகுதியில், கடந்த ஓரிரு வாரங்களுக்குள் 3 சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, அப்பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அங்கு சுகாதார நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்பாட்டில், கோமான் மேலத் தெரு - அஷ்ஷெய்க் நெய்னா முஹம்மது வலிய்யுல்லாஹ் தர்கா வளாகத்தில் - 25.03.2017. சனிக்கிழமையன்று 10.00 மணி முதல் 12.30 மணி வரை - நிலவேம்புக் குடிநீர் தயாரித்து வினியோகிக்கப்பட்டது.
கோமான் மேலத் தெரு, நடுத்தெரு, கீழத் தெரு, அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) உள்ளிட்ட் பகுதிகளைச் சேர்ந்தோர் உட்பட சுமார் 1000 பேர் இம்முகாம் மூலம் நிலவேம்புக் குடிநீர் பெற்றனர்.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சிறப்புக் கூட்டம் - அன்று 17.00 மணியளவில், தர்கா வளாகத்தில் நடைபெற்றது.
கோமான் ஜமாஅத் பொருளாளர் காஸிம் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், அனைவரையும் வரவேற்றார்.
டெங்கு காய்ச்சலின் தன்மைகள், அது வராமல் தடுக்கும் முறை, வந்தால் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து, காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் ஹில்மீ விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினத்தில் விஷக் காய்ச்சல்கள் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக - நகராட்சியால் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் - குறிப்பாக கோமான் தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், அதற்காக பொதுமக்களிடம் எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் - காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் விளக்கிப் பேசியதோடு, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசு உருவாகும் விதம் குறித்தும் செய்முறை விளக்கத்துடன் விவரித்தார்.
பின்னர், முகாமில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவ அலுவலரும், சுகாதார ஆய்வாளரும் விளக்கங்களை வழங்கினர்.
காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம் - சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழியை முன்மொழிய, பங்கேற்றோர் அதை வழிமொழிந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முகாமை நடத்திட இட அனுமதியளித்த கோமான் ஜமாஅத் நிர்வாகம், ஏற்பாடுகளைச் செய்த காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், இணைந்து நடத்திய காயல்பட்டினம் நகராட்சி, முகாமில் பங்கேற்றோர் அனைவருக்கும் - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ நன்றி கூறினார்.
காலையில் நடைபெற்ற முகாமில், சுமார் 1000 பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. மாலையில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சிறப்புக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உள்ளிட்ட பணியாளர்கள், கோமான் தெருக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் இட நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, நிகழ்விடத்தின் வெளிப்பகுதியிலும் ஏராளமான பெண்கள் நின்று நிகழ்ச்சியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகக் குழு உறுப்பினர்களான பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஒய்.அஹ்மத் ஸுலைமான், சாளை நவாஸ் உட்பட பலர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |