காயல்பட்டினம் கோமான் தெருவில் - டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. “நடப்பது என்ன?” குழுமம் ஒருங்கிணைத்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன? குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி 01ஆவது வார்டுக்குட்பட்ட கோமான் தெரு பகுதியில், கடந்த ஓரிரு வாரங்களுக்குள் 3 சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அப்பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அங்கு சுகாதார நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்பாட்டில், கோமான் மேலத் தெரு - அஷ்ஷெய்க் நெய்னா முஹம்மது வலிய்யுல்லாஹ் தர்கா வளாகத்தில் - இன்று (25.03.2017. சனிக்கிழமை) 10.00 மணி முதல் 12.30 மணி வரையிலும், மீண்டும் 16.30 மணி முதல் 17.30 மணி வரையிலும் - டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை, “நடப்பது என்ன?” குழுமம் செய்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|