சென்னையிலுள்ள காயலர்களை ஒருங்கிணைத்து நடத்தப்படும் - காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில், சென்னையில் பல்துறை மருத்துவ இலவச முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயலர்கள் உட்பட 576 பேர் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்..
எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!
கே.சி.ஜி.சி , யூனிட்டி பப்ளிக் ஸ்கூல், அரிமா சங்கம் கிரவுன் மற்றும் அப்பலோ மருத்துவமனை இணைந்து 26-03-2017 ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெருங்கிருபையால் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இம்முகாமிற்கு தொடக்கம் முதலே பெருவாரியான மக்கள் வரிசையில் அவரவர் பெயர் விபரங்கள் பதிவதற்காக வந்திருந்தனர். முதியோர் முதல் சிறுபிள்ளைகள் வரை ஆண்களும் பெண்களும் பல்வேறு உடல்ரீதியான ஆலோசனைகளை மருத்துவர்களிடமிருந்து பெற்றுச்சென்றனர்.
இந்த முகாமில் பொது மருத்துவ பரிசோதனையில் 261 நபர்களும், கண் பரிசோதனையில் 280 நபர்களும் மற்றும் பல் பரிசோதனையில் 35 நபர்களும் ஆக மொத்தம் 576 நபர்கள் கலந்து கொண்டார்கள்.
கலந்து கொண்ட நபர்களில் 32 நபர்களுக்கு கட்டணமில்லா ஈ.சி.ஜி யும், 46 நபர்களுக்கு கட்டணமில்லா கண் கண்ணாடிகளும் மற்றும் 34 நபர்களுக்கு கட்டணமில்லா கண் புரை அறுவை சிகிச்சைகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இம்முகாமிற்காக சகோ.லயன் M.M.அஹமது அவர்கள் தலைமையின் கீழ் சகோ.நஜீம் பாபு, சகோ.ஷமீமுல் இஸ்லாம், சகோ.பல்லாக் சுலைமான், சகோ.சொளுக்கு முஹம்மத் நூஹ், சகோ.நெட்காம் புஹாரி, சகோ.அட்வகேட் ஹசன் பைசல், சகோ. ஃபசல் இஸ்மாயில் ஆகியோர் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
மேலும் இம்முகாமில் கே.சி.ஜி.சி யின் மூத்த உறுப்பினர்களான சகோ. ஸ்மார்ட் காதர், சகோ.குளம் இப்ராஹிம், சகோ.M.E.சேக் ஆகியோரும் கலந்து தங்களது பங்களிப்பினை செலுத்தினார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சொளுக்கு M.A.C.முஹம்மத் நூஹ்
|