தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) அணி சாம்பியன் பட்டத்தை வென்று, மாநில அளவிலான சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. விரிவான விபரம்:-
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டிகள் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு மண்டலங்களில் நடைபெறும். இவ்விரு மண்டலங்களில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பர் லீக் என்னும் நாக் அவுட் சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெறும்.
இவ்வாண்டு காயல்பட்டினம் KSC, USC, சாகுபுரம் DCW, வீரபாண்டியன்பட்டினம் அணிகள், புன்னைக்காயல், நாசரேத் அணிகள் ஆகியவற்றை உள்ளடக்கி - திருச்செந்தூர் மண்டல அளவில் நடைபெற்ற கால்பந்து லீக் போட்டிகளில், புள்ளிகள் அடிப்படையில் காயல்பட்டினம் KSC அணி முதலிடத்தையும், நாசரேத் மர்காஷிஸ் அணி இரண்டாமிடத்தையும் பெற்று, சூப்பர் லீக் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின .
தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட அணிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி மண்டலத்திலிருந்து வில்சன் மற்றும் ஸ்பிரிட்டட் யூத் அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பெற்று, சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றன.
சூப்பர் லீக் நாக் அவுட் போட்டிகள் கடந்த மார்ச் 24 முதல் 26ஆம் நாள் வரை தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
முதலாவது போட்டியில், காயல்பட்டினம் KSC - தூத்துக்குடி ஸ்பிரிட்டட் யூத் அணிகள் மோதின. ஆட்டம் சமனில் முடிந்ததால், சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில் KSC அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.
இரண்டாவது போட்டியில் தூத்துக்குடி வில்சன் - நாசரேத் மர்காஷிஸ் அணிகள் விளையாடின. இதுவும் சமனில் முடிவுற்றதால், சமனுடைப்பு முறையில் நாசரேத் அணி வெற்று பெற்று இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.
காயல்பட்டினம் KSC - நாசரேத் மர்காஷிஸ் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி, மார்ச் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணியளவில் நடைபெற்றது. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் KSC அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் முஹம்மத் அலீ, லத்தீஃப் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம், KSC அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக தூத்துக்குடி மாவட்ட சாம்பியனானது.
முன்னதாக இறுதி போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட KSC யின் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டார். அவருக்கு, ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக பொருளாளர் ஆல்ட்ரின் மிராண்டோ, KSC தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், அதன் செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக் தம்பி, தூத்துக்குடி மாவட்ட கால்பந்து நிர்வாகிகள் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற - வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு சுழற்கோப்பையும், வீரர்களுக்கு பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினர்.
இறுதி போட்டியைக் காண காயல்பட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் கால்பந்து ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டு, போட்டியைக் கண்டுகளித்தனர்.
கடந்த 5 ஆண்டுகளில் – காயல்பட்டினம் KSC அணி, அதன் பயிற்சியாளர் செய்யித் முஹ்யித்தீன் வழிகாட்டலில், திருச்செந்தூர் மண்டல அளவில் நடைபெற்ற கால்பந்து லீக் போட்டிகளில் 2013, 2014, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் முதலிடத்தையும், 2016ஆம் ஆண்டு இரண்டாமிடத்தையும் பெற்று, தொடர்ந்து 5 முறையும் சூப்பர் லீக் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதும், 2013, 2016 ஆகிய ஆண்டுகளிலும், நடப்பாண்டிலும் (2017) சூப்பர் லீக் போட்டிகளில் முதலிடம் பெற்று, மாவட்ட சாம்பியனாகத் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவில் சென்னையில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான கால்பந்துப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாக்கம்:
ஹாங்காங்கிலிருந்து...
முத்து இப்றாஹீம்
தகவல்:
சீஷெல்ஸிலிருந்து...
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர் – KSC விளையாட்டுத் துறை)
|