காயல்பட்டினம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், பத்திரப் பதிவின்போது - அரசின் வழிகாட்டல் தொகை (GUIDELINE VALUE)க்குக் கூடுதலாக செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அவ்வாறு கட்டாயப்படுத்தலாமா? நகரில் தற்போது அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டல் தொகை (Guidline Value) எவ்வளவு? போன்ற விபரங்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
தமிழகத்தில் ஏப்ரல் 01, 2012இல் நடைமுறைக்கு வந்த வழிகாட்டல் தொகையே (GUIDELINE VALUE) தற்போது நடைமுறையில் உள்ளது. புதிதாக வழிகாட்டல் தொகை (GUIDELINE VALUE) எதுவும் தமிழக அரசால் வெளியிடப்படவில்லை.
தற்போது காயல்பட்டினத்தில் நடைமுறையிலுள்ள வழிகாட்டல் தொகை விபரங்கள் - இரு பக்கங்களாக இணைக்கப்பட்டுள்ளது. சதுர அடிக்கும், சதுர மீட்டருக்குமான தொகை விபரம் அதில் உள்ளது.
இத்தொகைக்குக் கூடுதலாக பத்திரப் பதிவு செய்ய, சார்பதிவாளர் (SUB-REGISTRAR) - கட்டாயப்படுத்தக் கூடாது.
சில காரணங்களுக்காக - பதிவு செய்ய வரும் பொதுமக்களுள் ஒருவர், வழிகாட்டல் தொகை (GUIDELINE VALUE)க்குக் கூடுதலாகப் பத்திரவு பதிவு செய்தால், அத்தொகையை மேற்கோள்காட்டி, அப்பகுதியைச் சார்ந்த பிற பத்திர பதிவுகளுக்கும் அதே தொகையைக் கடைபிடிக்கவேண்டும் எனவும் கட்டாயப்படுத்தக் கூடாது.
பத்திரப் பதிவு செய்ய வரும் பொதுமக்களுள் ஒருவர், வழிகாட்டல் தொகைக்கும் குறைவாக பத்திரப்பதிவு செய்ய - சில காரணங்களுக்காக முயற்சிக்கலாம். அதுபோன்ற விண்ணப்பங்களையும் நிராகரிக்காமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இதற்கான அதிகாரியின் (DRO Stamps) பார்வைக்கு சார்பதிவாளர் அதைக் கொண்டு செல்லவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |