காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள குருசடி தொடர்பாக, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், எம்.தமீமுன் அன்ஸாரீ ஆகியோரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரைப் பூங்காவிற்கு வடகிழக்கே - அரசு புறம்போக்கு நிலத்தில், கீரிக்குளம் எனப்படும் இடத்திற்கும், பெண்கள் அமரும் பகுதிக்கும் மிக அருகில், குருசடி என்ற கிருஸ்துவ வழிபாட்டுத் தலம் - சட்டத்திற்குப் புறம்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானம் - மத்திய அரசின் CRZ NOTIFICATION 2011 விதிமுறைகள் தடைசெய்துள்ள LOW TIDE LINE (LTL) மற்றும் HIGH TIDE LINE (HTL) என்ற இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பு சூழலைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பான கோரிக்கை மனுக்கள் 21.03.2017. அன்று - அ.தி.மு.க. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சி.தா.செல்லப்பாண்டியன், தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி ஆகியோரது அலுவலகங்களில், “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று (22.03.2017. புதன்கிழமை) திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் - இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் - காயல்பட்டினத்தைப் பூர்விகமாகக் கொண்டவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரும் - மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.தமீமுன் அன்ஸாரீ ஆகியோரிடம் “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக மனுக்கள் வழங்கப்பட்டன.
சட்ட வழிகாட்டுதல்கள் மீறப்படக்கூடாது என்பதாலும், நகரில் அனைத்து சமுதாய மக்களிடையே நல்லுறவு பாதிக்கப்படக்கூடாது என்பதாலும் - இக்கட்டுமானங்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து அகற்றிட, தொடர்புடைய அரசு அதிகாரிகளை வலியுறுத்தும்படியும், இது தொடர்பான அமைச்சர்களிடம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தக் கோரியும், அவசியம் ஏற்பட்டால் - இது தொடர்பாக சட்டமன்றத்தில் அரசிடம் கேள்வி எழுப்பவும் அம்மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |