காயல்பட்டினம் கடற்கரை குருசடி விவகாரம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியான அரசாணையை நடைமுறைப்படுத்த - மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரைப் பூங்காவிற்கு வடகிழக்கே - அரசு புறம்போக்கு நிலத்தில், கீரிக்குளம் எனப்படும் இடத்திற்கும், பெண்கள் அமரும் பகுதிக்கும் மிக அருகில் - குருசடி என்ற கிருஸ்துவ வழிபாட்டுத்தலம் - சட்டத்திற்குப் புறம்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானம் - மத்திய அரசின் CRZ NOTIFICATION 2011 விதிமுறைகள் தடைசெய்துள்ள LOW TIDE LINE (LTL) மற்றும் HIGH TIDE LINE (HTL) என்ற இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், துறை அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இக்கட்டுமானங்கள் - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும், தமிழக அரசின் அரசாணைகளுக்கும் – எதிரானவை.
உச்ச நீதிமன்றத்தில் SLP(C) 8519/2006 என்ற எண் கொண்ட வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில், தமிழகம் உட்பட - நாட்டின் அனைத்து மாநிலங்களும் பிரதிவாதிகளாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்த முக்கிய வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து - ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பொது இடங்களில் வழிப்பாட்டுத் தலங்கள் கட்டப்படுவதைத் தடுத்து - நாட்டின் அனைத்து மாநிலங்களும் அரசாணைகளை வெளியிட்டுள்ளன. தமிழக அரசு இது தொடர்பான அரசாணையை (GO(Ms) No.437 dated 13.9.2010) - வருவாய்த்துறை மூலமாக - கடந்த 2010ஆம் ஆண்டே வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை - கடந்த 11 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வரும் சூழலிலும், தமிழக அரசு இதுகுறித்த தெளிவான அரசாணையை 7 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டுள்ள சூழலிலும், சட்டத்திற்குப் புறம்பான - இந்த ஆட்சேபனைக்குரிய கட்டுமானத்தை அப்புறப்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுவது மிகவும் வருத்தத்திற்குரியது என்றும், சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள இந்தக் குருசடியை, அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்து - உச்சநீதிமன்ற உத்தரவையும், தமிழக அரசின் அரசாணையையும் நடைமுறைப்படுத்தக் கேட்டுக்கொண்டும் - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், திருச்செந்தூர் கோட்டாட்சியர், திருச்செந்தூர் வட்டாச்சியர், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|