காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று (21.03.2017. செவ்வாய்க்கிழமை) 11.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகராட்சியின் பொறியாளர் பாலமுருகன், வருவாய் அலுவலர் ராஜேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் மீனா சேகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் சிறப்புரையாற்றினார்.
டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் உருவாகும் விதம் குறித்தும், அவை வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகள், வந்துவிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசிய அவர், இது தொடர்பாக காயல்பட்டினம் நகராட்சி எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறி, இந்நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பளிக்குமாறு தத்தம் இல்லங்களில் அனைத்து மாணவர்களும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குடிநீர் வழியே காய்ச்சலைப் பரப்பும் கிருமிகள் அண்டாதிருக்க, கொதிக்க வைத்து நீரை உட்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, அனைத்து மாணவ-மாணவியரும் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான மாணவர்களை இவ்வாறு ஓரிடத்தில் ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதால், ஒரே நாளில் பல நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு விழிப்புணர்வுச் செய்திகள் சென்று சேரும் என்ற எண்ணத்திலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்படுவதாகவும், நகரின் அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்தடுத்து இந்நிகழ்ச்சியை நடத்திட திட்டம் உள்ளதாகவும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் காயல்பட்டணம்.காம் இடம் கூறினார்.
களத்தொகுப்பு & படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
|