காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் பீ.எம்.ஐ.சஊத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 18.03.2017 சனிக்கிழமையன்று, அமைப்பின் உறுப்பினர் பீ.எம்.ஐ. அப்துல் காதர் இல்லத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை:
ஹாஃபிழ். எம்.எஸ்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மது இர்ஷாத் அலி வரவேற்புரையாற்றினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, செயலாளர் பி.எம்.ஐ.சவூத் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்டது.
உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டம்:
நகர்நலப் பணிகளை அதிகளவில் செய்திடுவதற்காக தேவையான நிதியாதாரத்தைத் திரட்டிடவும், மன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினர் (குறிப்பாக பெண்கள்) நகர்நலப் பணிகளுக்காக ஆர்வத்தோடு ஒத்துழைப்பு வழங்கிட செய்யவும் “உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உறுப்பினர் இல்லத்திற்கும் ஓர் உண்டியல் கொடுப்பது என்றும், ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர்களிடமிருந்து உண்டியல்கள் சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் தொகை மன்றத்தின் வரவு கணக்கில் சேர்த்திடவும் முடிவெடுக்கப்பட்டது.
இதற்கான முதலாவது உண்டியலை அமைப்பின் ஆலோசனை குழு உறுப்பினர் ஹாஜி ஏ.எஸ். ஜமால் அவர்கள் பெற்றுக்கொகொண்டு இப்புதிய திட்டத்தினை துவக்கிவைத்தார்.
தீர்மானங்கள்:
அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் சார்பில், 18.03.2017. அன்று துவங்கப்பட்ட Generic Medical Shop மக்கள் மருந்தகம் பற்றியும், அதன் அவசியத்தை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு, இதற்காக பேரவையின் சார்பில் ரூபாய் 50 ஆயிரம் ஏற்கனவே ஷிஃபா நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
2. கத்தர் காயல் நல மன்றம் மற்றும் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி & பரிசோதனை இலவச முகாமிற்கான செலவு கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்டது.
3. இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் கத்தர் காயல் நல மன்றத்தால் முன்னெடுத்துச் செய்யப்பட்டு வரும் ஏழை மாணவ-மாணவியருக்கான பள்ளிச் சீருடை இலவச வினியோகத் திட்டத்திற்கு, வரும் கல்வியாண்டில் 30 செட் பள்ளிச் சீருடைகள் (15 boys & 15 girls) பேரவையின் சார்பில் அனுசரணை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
4. இக்ராஃ கல்விச் சங்கம் மூலம், காயல்பட்டினம் நகர மாணவர்களுக்கு IAS, IPS உள்ளிட்ட அரசுப் பணி சார்ந்த சிறப்புக் கல்விப் பிரிவுகள் குறித்து ஆர்வமூட்டி, முறையான பயிற்சியளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு, இவ்வகைக்காக பேரவையின் சார்பில் ரூபாய் 15 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
5. பேரவையின் தையல் தொழில் அமைப்பு KUF HONG KONG GARMENTS & TAILORING பற்றிய தகவலை பெண்கள் மற்றும் மாணவ மாணவியர்களிடம் நேரடியாக சென்றடையும் விதமாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடுவது என்றும், எதிர்வரும் கோடை விடுமுறையில் எமது இரு மையங்களில் இயங்கி வரும் மகளிர் தையல் பயிற்சியகத்தில் அதிக மாணவியர்கள் சேர்ப்பித்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
6. பேரவையின் நடப்பு ஆண்டிற்கான பொதுக்குழுக்கூட்டத்தை எதிர்வரும் புனித ரமழான் மாதத்திற்கு முன்னரே நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் நன்றி கூற, ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மது இர்ஷாத் அலி துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி செயலாளர் பி.எம்.ஐ.சவூத் அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது. குழுப்படம் பதிவு செய்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|