சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து, மன்றத்தின் புதிய செயலர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
வருடாந்திர பொதுக்குழு:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர - 12ஆவது பொதுக்குழுக் கூட்டம் - மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமையன்று 10.30 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நுழைவாயிலில் வருகைப் பதிவு நடைபெற்றது.
அறிமுகவுரை:
பீ.எம்.எச்.அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
மன்றத்தின் அனைத்துப் பணிகளும் நேர நிர்ணயத்தின் அடிப்படையிலேயே அமையப் பெற்றுள்ளதால், குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கிய அவர், வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் விவரித்தார்.
மன்றம் துவக்கப்பட்டது முதல் இதுநாள் வரையிலான அதன் வளர்ச்சிகளை சுருக்கமாக விளக்கிய அவர், இன்னும் பல்லாண்டு காலம் மன்றம் தொய்வின்றி இயங்கிட, அவ்வப்போது மாற்றங்களைக் கொண்டதாக மன்றம் அமைய வேண்டும் என்றும், எல்லாக் காலத்திலும் ஒரு சிலரையே மன்றம் சார்ந்திருக்கும் நிலையில் வைத்திருப்பது ஆரோக்கியமானதல்ல என்றும், புதியவர்கள் தன்னார்வமுடன் மன்றப் பொறுப்புகளை ஏற்க முன்வர வேண்டும் என்றும், தற்போது புதிய செயற்குழுவில் அங்கம் வகிக்க வேட்பு மனு செய்தவர்கள் - தத்தம் பொறுப்புகளின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, அதன்படி செயலாற்ற வேண்டும் என்றும் கூறினார். தற்போது பொறுப்பேற்கவிருக்கும் புதிய செயற்குழு, தம் பொறுப்புக் காலத்திலேயே - அடுத்த பருவத்திற்கான பொறுப்பாளர்களை இனங்காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் அனைவரையும் வரவேற்று தலைமையுரையாற்றினார்.
2015 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான தமது பொறுப்புக் காலத்தில், மன்றத்தை உற்சாகத்துடன் வழிநடத்திட தொடர்ச்சியான முழு ஒத்துழைப்புகளை மனதார வழங்கியமைக்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் - விடைபெறப்போகும் நிர்வாகிகள் & செயற்குழுவினர் சார்பில் அவர் துவக்கமாக நன்றி தெரிவித்தார்.
“வசிப்பிட வலிமை – பிறப்பிட வளமை” (“Local Strength = Kayal Reach”) எனும் முழக்கத்தை இலச்சினையில் (லோகோ) கொண்டுள்ள நம் மன்றம், அதனை எல்லா வகையிலும் செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியதோடு, இறையருளால் கடந்த 2016ஆம் ஆண்டிற்கான நிதித் தேவைகளை - மன்ற உறுப்பினர்கள் அனைவரின் மனப்பூர்வமான நன்கொடைகள், சந்தாக்களின் துணை கொண்டு பூர்த்தி செய்துகொண்டதாகக் கூறினார்.
மன்றத்தின் கடந்த கால செயல்திட்டங்களை சிறப்புற வடிவமைத்துச் செயல்படுத்திய பொறுப்பாளர்களுக்கு அவர் பெயர் குறிப்பிட்டு நன்றி கூறினார்.
2015ஆம் ஆண்டில் விளையாட்டு நிரல்களை வடிவமைத்து செயலாற்றியமைக்காக எம்.எம்.அப்துல் காதிர் & எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ ஆகியோருக்கும், 2016ஆம் ஆண்டின் விளையாட்டு ஏற்பாடுகளைச் செய்த கே.எஸ்.ஐ.அபூபக்கர் & சாளை ஷேக் ஷீத் ஆகியோருக்கும், கடந்த இரண்டாண்டுகளாக - காயல்பட்டினத்தில் தேவையுடைய மக்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தை நடத்திய சோனா அபூபக்கர் ஸித்தீக் & எம்.எஃப்.பஸல் இஸ்மாஈல் ஆகியோருக்கும், முதியோர் நலத்திட்ட உதவிகளைச் சிறப்புற செய்த எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ, எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல் & ஜக்கரிய்யா மவ்லானா, வரவு-செலவு கணக்குகளை சிறப்புற பராமரித்தமைக்காக உமர் ரப்பானீ & சாளை நவாஸ், தாயகத்தில் மன்றப் பணிகளை முன்னின்று செய்த மன்றப் பிரதிநிதி கே.எம்.டீ.சுலைமான் & கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோருக்கும், சிங்கப்பூர் காயல் நல மன்றம் உட்பட உலக காயல் நல மன்றங்களின் ஒத்துழைப்புடன் - ஷிஃபா அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் காயல்பட்டினத்தில் “மக்கள் மருந்தகம்” சிறப்புற துவக்கப்படுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னின்று செய்தமைக்காக மன்ற உறுப்பினர் சாளை நவாஸுக்கும் நன்றி தெரிவித்த அவர், இன்னும் பலர் இம்மன்றத்தின் நலப்பணிகளுக்காக நிறைவான ஒத்துழைப்புகளைச் செய்திருப்பர் என்றும், அவர்களின் பெயர் விடுபட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறும் கூறினார்.
இனி வருங்காலங்களில் மன்றத்தால் செய்யப்படவுள்ள நகர்நலத் திட்டங்களுக்கு உறுப்பினர்கள் தாமாக முன்வந்து பொறுப்பேற்க வருமாறு அழைப்பு விடுத்ததுடன், இவற்றைச் செய்வதற்காக புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள செயற்குழுவிற்கு, மன்ற உறுப்பினர்கள் என்றும் போல் தமது நல்லாதரவை நிறைவாக வழங்கிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நமதூரின் - தேவையுடைய மக்களுக்காக மன்றத்தால் செய்யப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களையும் அல்லாஹ் தனதருளால் ஏற்க வேண்டும் என்றும், இதற்கான ஒத்துழைத்த அனைவருக்கும் நிறைவான நற்கூலிகளை ஈருலகிலும் வழங்கிட வேண்டும் என்றும் பிரார்த்தித்து, அவர் தனதுரையை முடித்துக்கொண்டார்.
ஆண்டறிக்கை & தீர்மானங்கள்:
மன்றத்தின் 2016ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை - செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வாசித்தார். அதன் சுருக்கமும், நடப்பு கூட்ட தீர்மானங்களும்:-
>> முதன்முறையாக மன்றத்தால் “சூட்டுக்கறி (BBQ) ஒன்றுகூடல்” நடத்தப்பட்டுள்ளது... இந்நிகழ்ச்சிக்கு உற்சாகத்துடன் கூடிய சாதகமான பின்னூட்டங்கள் பெறப்பட்டதையடுத்து, இனி வருங்காலங்களிலும் இதைச் செய்திட திட்டமுள்ளது.
>> வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட பட்டப் படிப்புகளுக்காக மகளிருக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட தீர்மானிக்கப்பட்டது...
>> ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்பின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக 25 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...
>> சிங்கப்பூரிலுள்ள முஹம்மதிய்யா சிறார் நல இல்லத்தில், ஒருநாள் காலை உணவு வகைக்காக 1000 சிங்கப்பூர் டாலர் வழங்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாக அலுவலரும், வசிப்பவர்களும் ஆர்வமுடன் அதைப் பெற்றுக்கொண்டு, வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துப் பிரார்த்தித்தனர்...
>> மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்களுக்காக ஹிஃப்ழ் & திருக்குர்ஆன் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மிகுந்த சிரமமெடுத்து, இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கேள்விகளைத் தொகுத்தமை பாராட்டுக்குரியது. மன்றத்தின் வருடாந்திர நிகழ்ச்சிகளில் இப்போட்டி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது...
>> கத்தர் காயல் நல மன்றத்தால் முன்னெடுத்துச் செய்யப்படும் “ஏழை மாணவ-மாணவியருக்கான பள்ளி இலவச சீருடை” வழங்கும் திட்டத்தில் சிங்கை காயல் நல மன்றமும் பங்கெடுத்துள்ளது.
>> காயல்பட்டினம் நகர மத்ரஸாக்களின் ஹாஃபிழ்களை ஊக்குவிக்கும் வகையில், அல்ஜாமிஉல் அஸ்ஹர், ஹாமிதிய்யா, முஅஸ்கர் ஆகிய மத்ரஸாக்களின் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்து, பட்டம் பெற்ற ஹாஃபிழ்கள் - ஹாஃபிழாக்களுக்கு மன்றத்தால் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
>> நகரில் தேவையுடைய 130 காயலர் குடும்பங்களுக்கு கடந்த ரமழான் மாதத்தில், 3 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் அத்தியாவசிய சமையல் பொருட்கள் கொண்ட பொதி வழங்கப்பட்டுள்ளது... ஹஜ் பெருநாளின்போது, 87 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் சமையல் பொருட்கள் பொதி வழங்கப்பட்டுள்ளது...
>> 2016-2018 பருவத்திற்கான இக்ராஃவின் தலைமைப் பொறுப்பை சிங்கப்பூர் காயல் நல மன்றம் ஏற்றுள்ளது. அதன் தலைவராக எம்.எம்.மொகுதூம் முஹம்மத் பொறுப்பேற்று, சிறப்புற வழிநடத்தி வருகிறார்...
>> முதியோர் நல உதவித் திட்டத்தின் கீழ், 2016 அக்டோபர் முதல் 2017 செப்டம்பர் வரையிலான புதிய பருவத்தில், 6 பயனாளிகளுக்கு - மன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகளைக் கொண்டு 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...
>> இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகள் பட்டப்படிப்பிற்காக, ஏழை எளிய மாணவர்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...
>> சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் கடந்த ஹஜ் பெருநாளையொட்டி “இக்ராஃ நாள்” அறிமுகப்படுத்தப்பட்டு, மன்ற உறுப்பினர்களின் மனப்பூர்வமான பங்களிப்பின் பயனாக 1 லட்சம் ரூபாய் இக்ராஃவுக்காக நிதி திரட்டப்பட்டது... இவ்வகைக்காக உதவிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...
>> துளிர் பள்ளியில் வகுப்பறை கட்டுவதற்காக மன்ற உறுப்பினர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்...
>> ஷிஃபா மூலம் மருத்துவ உதவிகள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் பெறுவது முதற்கொண்டு, நிதியளிப்பது வரையிலான நடைமுறைகள் குறித்து அதன் அறங்காவலர்களுள் ஒருவரும், மன்றத் தலைவருமான எம்.ஆர்.ரஷீத் ஜமான் விளக்கிப் பேசினார்... “முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்” மூலம் பொதுமக்கள் பயன்பெறுவதற்குத் தேவையான அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளையும் முன்னின்று செய்த மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸுக்கு நிறைவான நன்றிகள்...
>> சிங்கை காயல் நல மன்றத்தின் காலாண்டு செய்தியறிக்கையை - மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் வெளியிட்டார்...
2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கறிக்கை:
கடந்த 2016ஆம் ஆண்டிற்கான - மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் அபூ முஹம்மத் உதுமான் கூட்டத்தில் சமர்ப்பிக்க, அதற்கு கூட்டம் ஒருமனதாக இசைவளித்தது. இவ்வாண்டில், மொத்தம் 15 லட்சம் ரூபாய் நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய செயற்குழு தேர்ந்தெடுப்பு:
தேனீர் இடைவேளையைத் தொடர்ந்து, இரண்டாம் அமர்வு துவங்கியது. அதில், பெறப்பட்ட வேட்பு மனுக்களின் படி, புதிய நிர்வாகிகள் & செயற்குழு உறுப்பினர்கள் பெயர் பட்டியலை - மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் வாசிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது:-
புதிய செயற்குழுவின் சார்பில் - மன்றத் தலைவர் ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் சுருக்கவுரையாற்றினார். நகர்நலப் பணிகளைத் தொய்வின்றி முழு உற்சாகத்துடன் செய்திட, மன்ற உறுப்பினர்கள் தமது நிறைவான ஒத்துழைப்பை எப்போதும் போல் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |