காயல்பட்டினம் கடற்கரை குருசடி விவகாரத்தில், சட்டத்தை நிலைநாட்ட அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தக் கோரி - அதிமுக, திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரைப் பூங்காவிற்கு வடகிழக்கே - அரசு புறம்போக்கு நிலத்தில், கீரிக்குளம் எனப்படும் இடத்திற்கும், பெண்கள் அமரும் பகுதிக்கும் மிக அருகில், குருசடி என்ற கிருஸ்துவ வழிபாட்டுத்தலம் - சட்டத்திற்குப் புறம்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானம் - மத்திய அரசின் CRZ NOTIFICATION 2011 விதிமுறைகள் தடைசெய்துள்ள LOW TIDE LINE (LTL) மற்றும் HIGH TIDE LINE (HTL) என்ற இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், தமிழக அரசின் அரசாணைக்கும் எதிராகவும் இக்கட்டுமானங்கள் அமைந்துள்ளன.
அரசு நிலத்தில், மாவட்ட ஆட்சியர், நகராட்சியின் அனுமதி பெறப்படாமல் நடைபெற்று வரும் இக்கட்டுமானங்கள் தொடர்பாக - முழு விபரங்கள், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் (MOEFCC) அமைச்சகத்தின் செயலர் அஜய் நாராயண் ஜா IAS, தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு, தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் IAS, உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி IAS, வருவாய்த்துறை செயலர் பி.சந்திரமோஹன் IAS, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலர் முஹம்மத் நஸீமுத்தீன் IAS, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்ய மிஸ்ரா IAS, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் IPS, நகராட்சி ஆணையர், நகர ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) மண்டல துணை இயக்குனர் தூத்துக்குடி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (DEE), கோட்டாட்சியர் (RDO), வட்டாச்சியர் (Tahsildar) ஆகியோருக்கு “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு சூழலைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பான கோரிக்கை மனுக்கள் இன்று, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சி.தா.செல்லப்பாண்டியன், தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி ஆகியோரது அலுவலகங்களில், “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட வழிகாட்டுதல்கள் மீறப்படக்கூடாது என்பதாலும், நகரில் அனைத்து சமுதாய மக்களிடையே நல்லுறவு பாதிக்கப்படக்கூடாது என்பதாலும் - இக்கட்டுமானங்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து அகற்றிட, தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தும்படி அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|