சென்னையில் நடைபெற்ற – முதலமைச்சர் கோப்பைக்கான - தமிழ்நாடு மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டுப் போட்டியில், காயலரும் பங்கேற்ற திருச்சி அணி மூன்றாமிடத்தைத் தக்க வைத்துள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.சி.முஹம்மத் ஷாஃபிஈ – திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் பயின்று வருகிறார். திருச்சி ஜனதா டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் மர்ஹூம் ஷாஃபிஈ அவர்களின் மகன் வழிப் பேரனும், காரீ ஏ.டீ.முஹம்மத் அப்துல் காதிர் உடைய மகள் வழிப் பேரனும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) உடைய கால்பந்து விளையாட்டு வீரரான எம்.எஸ்.ஷேக் அப்துல் காதிர் என்பவரது மகனுமாவார். ஹாக்கி விளையாட்டு வீரரான இவர், திருச்சி மாவட்ட அணிக்காக விளையாடி வருகிறார்.
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் ஆதரவுடன் – காஞ்சிபுரம் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், ஆண்களுக்கான – மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டி - சென்னை எழும்பூரிலுள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானம், அண்ணா சாலை மத்ரஸா – இ – ஆஸம் பள்ளியின் மைதானம் ஆகிய மைதானங்களில், கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் நாள் துவங்கி, 19ஆம் நாள் வரை நடைபெற்றது.
இதில் – சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, தேனி, நாமக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, முகவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 30 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் முதலில் லீக் முறையிலும், நிறைவில் நாக் அவுட் முறையிலும் நடத்தப்பட்டன.
இதில், காயலர் எஸ்.ஏ.சி.முஹம்மத் ஷாஃபிஈ கோல் காப்பாளராக விளையாடிய திருச்சி அணி அரையிறுதி வரை முன்னேறி மூன்றாமிடத்தைப் பெற்றது. இவ்வெற்றிக்காக, அவ்வணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும், பொருட்பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
சுலைமான் (KSC)
நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
|