குப்பை புதிய வரி குறித்து பொதுமக்களிடமிருந்து எந்த ஆட்சேபணையும் பெறப்படவில்லை என உண்மைக்குப் புறம்பாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
குப்பைகளை அகற்ற அனைத்து வீடுகளிலிருந்தும் கட்டணம் (USER FEE) வசூல் செய்ய - காயல்பட்டினம் நகராட்சி, சில நடவடிக்கைகளை கடந்த ஆண்டு மேற்கொண்டது.
SOLID WASTE MANAGEMENT RULES 2016 என்ற மத்திய அரசின் விதிமுறைகளை மேற்கோள்காட்டி, இது குறித்து 24-3-2017 அன்று, தனி அலுவலராக (SPECIAL OFFICER) செயல்புரியும் காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் மூலம், தீர்மானம் (#1373) ஒன்று நகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் - நகராட்சி சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி, மாதிரி துணை விதிகளுக்கு (Bylaws) ஒப்புதல் வழங்கப்பட்டன.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே (9-3-2017), நடப்பது என்ன? குழுமம் சார்பாக - காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கப்பட்டது. அதில் - ஏற்கனவே பல்வேறு வரிசுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மீது, தனது அத்தியாவசிய பணியினை செய்ய - அதுவும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலில் - புதிய வரியினை நகராட்சி அறிமுகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே கருத்தை வலியுறுத்தி - நகராட்சி சார்பாக நடப்பட்ட கருத்துக்கேட்கும் கூட்டத்தில், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - ஆட்சேபனை பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் - ஏப்ரல் 20, 2017 அன்று தினமணி நாளிதழில், அறிவிப்பு ஒன்றினை காயல்பட்டினம் நகராட்சி வெளியிட்டிருந்தது. (படம் இணைக்கப்பட்டுள்ளது) அதில் - அந்த அறிவிப்பு வெளியாகி, 15 தினங்களுக்குள், இந்த புதிய வரி குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் - பொது மக்கள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து - நகரின் பல்வேறு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அவர்களின் ஆட்சேபனை கையெழுத்துக்களை பெற்று - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம் அவர்களை நேரடியாக மே 4 அன்று சந்தித்து, ஆட்சேபனை மனு, நடப்பது என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்டது.
இதற்கிடையில் - இந்த ஆட்சேபணைகளையும் மீறி, காயல்பட்டினம் நகராட்சி சார்பாக புதிய வரி வசூல் செய்யப்பட துவங்கப்பட்டுள்ளதாக அறிந்து, இது குறித்த ஆட்சேபனை மனு, மாவட்ட ஆட்சியரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - 19-2-2018 அன்று வழங்கப்பட்டது.
அதில் - எவ்வாறு, துணை விதிகளை அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்னர், பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கைகளை காயல்பட்டினம் நகராட்சி பின்பற்றவில்லை என்பது தெரிவிக்கப்பட்டு, உடனடியாக புதிய வரியினை - காயல்பட்டினம் நகராட்சி வாபஸ் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரிடம் நடப்பது என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்ட இம்மனுவிற்கு தற்போது பதில் வழங்கியுள்ள காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், மனுவில் குறிப்பிட்டுள்ள புதிய திடக்கழிவு வரி அரசாணைப்படி விதிக்கப்பட்டு அதற்கான ஆட்சேபணை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கக்கோரி நாளிதழில் பொதுமக்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டது. எனினும் குறிப்பிட்ட நாட்களுக்குள் எந்த ஆட்சேபணையும் பொதுமக்களிடமிருந்து வரப்பெறவில்லை. எனவே புதிய திடக்கழிவு வரி அரசாணைப்படி விதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இது உண்மைக்கு புறம்பான தகவலாகும். இந்த புதிய வரிக்குறித்த ஆட்சேபனை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் - வெளிப்படையான முறையில், மே 4 அன்று, நேரடியாக வழங்கப்பட்டது. உண்மை இவ்வாறு இருக்க - பொது மக்களிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் வரவில்லை என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது சம்பந்தமான அடுத்தக்கட்ட நடவடிக்கையை, நடப்பது என்ன? குழுமம் விரைவில் மேற்கொள்ளும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 18, 2018; 4:30 pm]
[#NEPR/2018031801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|