காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள காவல் சாவடி தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அளித்துள்ள மனு, நடவடிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு (SP) அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பேருந்து நிலைய வாயிலில் கடந்த வாரம் - காவல்துறை சாவடி ஒன்று நிறுவப்பட்டது. காவல் நிலையம் இல்லாத ஊர் என்ற பெயர்பெற்ற இவ்வூரில், பேருந்து நிலைய வளாகத்தின் வெளியில் காவல் சாவடி நிறுவப்பட்டுள்ளது - பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பை உறுதிப்படுத்த, குற்றங்களைக் குறைத்திட ஒவ்வொரு ஊருக்கும் ஒரு காவல்நிலையம் / காவல்துறை சாவடி இருந்தே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை கருத்திற்கொண்டு, பொதுமக்களின் உணர்வுகளுக்கும், நகரின் பாரம்பரியத்திற்கும் மதிப்பளித்து இச்சாவடியை அகற்றிடக் கோரி, மார்ச் 12 திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
அம்மனு தற்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SUPERINTENDENT OF POLICE) திரு மஹேந்திரன் அவர்களின் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 17, 2018; 4:00 pm]
[#NEPR/2018031701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |