காயல்பட்டினம் நகராட்சி சார்பில் 45 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் வாங்கப்பட்ட – பாட்டரியில் இயங்கும் 25 குப்பை சேகரிப்பு வாகனங்கள் இதுவரை பயன்படுத்தப்படவே இல்லை என மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு காயல்பட்டினம் நகராட்சி மீது குற்றஞ்சாட்டி அரசிடம் முறையிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
மத்திய அரசின் தூய்மை இந்தியா (2017-2018) திட்டத்தின் கீழ் - 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு என ஒரு வாகனம் (BATTERY OPERATED VEHICLE) வாங்க மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
ரூபாய் ஒரு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த வாகனத்தில் உள்ள வசதிகளாக கீழ்க்காணும் தொழில்நுட்பங்கள் தெரிவிக்கப்பட்டன:
Re-cycleable Lithium battery operated collection cart
Load weight - 0.40
0.60 Ton capacity
Location tracker, GSM –Sim tracker capacity
20-30kms per charge with electric charger and adapter
6-3-2018 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரி, 20-3-2018 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி (#1539), M/s Krysttal Motors (P) Ltd, Salem என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தப்புள்ளியும் வழங்கப்பட்டது.
அதே வாகனம் போல் - மேலும் 24 வாகனங்கள், தூய்மை இந்தியா (2018-2019) திட்டத்தின் கீழ், 43.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கிட - 15.2.2019 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில், குறைந்த ஒப்பந்தப்புள்ளி வழங்கிய M/s Best &Fast Metal Fab, Coimbatore என்ற நிறுவனத்திற்கு, 28-2-2019 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (#1780) மூலம், ஒப்பந்தப்புள்ளியும் வழங்கப்பட்டது.
நகராட்சியில் வீடு வீடாக சென்று மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து சேகரம் செய்ய என காரணம் தெரிவிக்கப்பட்டு, இந்த வாகனங்கள் - வாங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.
அந்த வாகனங்களில் பல - நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல், நகராட்சி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதால் - பழுதடைந்துள்ளதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இது குறித்த முழுமையான விபரம் - மத்திய மற்றும் மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) மூலம் டிசம்பர் இறுதியில் அனுப்பப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, மத்திய அரசின் வீடுகள் மற்றும் நகர்ப்புற அமைச்சகம் (MINISTRY OF HOUSING AND URBAN AFFAIRS), இது குறித்து விசாரணைகள் மேற்கொண்டு - நிலை அறிக்கையை (STATUS REPORT) உடனடியாக அமைச்சகத்திற்கு வழங்கிட - சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு (CMA) உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|