காயல்பட்டினத்தில் காலங்கடந்து மின் பயனீட்டைக் கணக்கிட வருவதால் பொதுமக்கள் அதிக கட்டணத்தைச் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியும், உரிய நடவடிக்கை கோரியும் தமிழ்நாடு மின்வாரிய உயரதிகாரிகளிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு முறையிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் பல இடங்களில் உரிய காலத்தில் - மின் பயன்பாடு கணக்கெடுக்க பணியாளர்கள் வருவதில்லை; உதாரணமாக - தைக்கா தெரு, மொகுதூம் தெரு பகுதிகளில் கணக்கெடுத்து 65 தினங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதன் காரணமாக - பொது மக்கள், தங்கள் SLAB தாண்டி, அதிகம் கட்டணம் செலுத்தும் சூழல் நிலவுகிறது. இது குறித்து பலமுறை மின்வாரியத்துறையிடம் புகார் தெரிவித்தும், இந்நிலை தொடருகிறது.
எனவே - உடனடியாக, இதுவரை மின்பயன்பாடு கணக்கெடுக்காமல் உள்ள பகுதிகளில்,; உடனடியாக கணக்கெடுக்க உத்தரவிடும்படியும், வருங்காலங்களில் காலம்தாழ்த்தாமல் சரியான நேரத்தில் கணக்கெடுக்க அறிவுறுத்தும்படியும் மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் (SUPERINTENDING ENGINEER) அவர்களிடமும், திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் (EXECUTIVE ENGINEER) அவர்களிடமும் இன்று முறையீட்டு மனு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|