காயல்பட்டினம் வழித்தடத்தை பல அரசுப் பேருந்துகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், தமிழக போக்குவரத்துத் துறை ஆணையரின் உத்தரவை நடைமுறைப்படுத்துமாறும், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் முறையிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பகுதியை சில அரசு பேருந்துகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதை அனைவரும் அறிவர். இது சம்பந்தமாக போக்குவரத்துத்துறை சார்ந்து அனைத்து அலுவலகங்களிலும் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டும், இந்நிலை தொடர்கிறது.
போக்குவரத்துத்துறை ஆணையர் திரு சமயமூர்த்தி IAS அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம், திருச்செந்தூர் (RTO) அலுவலகத்திற்கு கடந்த ஆண்டு எழுதிய கடிதத்தில் இது குறித்து தொடர் நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தியிருந்தார்.
மேலும் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், இப்பிரச்சனை தீரும்வரை - அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்திடவும் தெரிவித்திருந்தார். ஆனால் - இதுவரை, வட்டார போக்குவரத்து அலுவலகம் (RTO) - இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே - போக்குவரத்து ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டி இன்று வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) திரு சக்திவேல் அவர்களிடம் மெகா அமைப்பு சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|