காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் ஏற்பாட்டில், ஈமோஃபீலியா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, இம்மாதம் 08ஆம் நாளன்று நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
ஈமோஃபீலியா (Haemophilia / Hemophilia) என்பது மனித உடலில் குருதி உறையாமல் போகும் இரத்த குறைபாடு ஆகும்.
இரத்தத்தை உறையச் செய்யும் காரணிகளின் (CLOTTING FACTORS) செயல்பாடு குன்றுவதால், இரத்த குறைபாடு உண்டாகிறது. FACTOR VIII என்ற காரணி குறைவாக இருப்பதன் காரணமாக ஈமோஃபீலியா - A வகை இரத்த குறைபாடு ஏற்படும்; FACTOR IX என்ற காரணி குறைவாக இருப்பதன் காரணமாக ஈமோஃபீலியா - B வகை உறையாமை குறைபாடு ஏற்படும்.
இந்த உறையாமை குறைபாடு பெரும்பாலும் ஆண்களிடமே காணப்படும். 7500 ஆண்களில் ஒரு ஆணுக்கு - ஈமோஃபீலியா - A நோய் உண்டு எனவும், 40,000 ஆண்களில் ஒரு ஆணுக்கு - ஈமோஃபீலியா - B உண்டு எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு நிரந்தர மருத்துவம் செய்ய பல ஆய்வுகள் நடந்து வருகிறது எனினும் காயங்கள் ஏற்பட்டு குருதி கசிவு நிற்கவில்லை என்றால், இரத்த உறையாமை பிரச்சனையை சரி செய்ய FACTOR VIII அல்லது FACTOR IX, ஊசி மூலம் உடலில் ஏற்றப்படும்.
காயல்பட்டினத்தில் இந்த அரிய குறைபாடு - ஒரு சிலரிடம் காணப்படுகிறது. இதனை எவ்வாறு பெற்றோர்களும், சமுதாயமும் எதிர்க்கொள்ளலாம் என அறிந்திட, ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி - நடத்தப்படவுள்ளது.
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) உடைய முயற்சியில் ஈமோஃபீலியா ஆதரவு குழுமம் (HAEMOPHILIA SUPPORT GROUP) என்ற பெயரில் இயங்கவுள்ள ஒரு சிறப்பு பிரிவு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த துறையின் மூத்த வல்லுனரான திருநெல்வேலி பீஸ் ஹெல்த் சென்டர் உடைய தலைவர் டாக்டர் R.அன்புராஜன் B.Sc., MBBS, DMLS, FHM, DFM, FCGP - சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு, உரை நிகழ்த்தி, சந்தேகங்களுக்கு பதில் அளிக்கவும், வழிகாட்டவும் உள்ளார்.
இந்நிகழ்ச்சி - எதிர்வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 8) அன்று KMT மருத்துவமனை வளாகத்தில், மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை - இறைவன் நாடினால் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|