காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதையைப் பொதுமக்கள் சரியாகக் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்க, அதன் நான்கு சந்திப்பு முனைகளிலும் போக்குவரத்துக் காவலர்களை நிறுத்திடுமாறு, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் ஏற்பாட்டில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பிரதான சாலையில் - ஒரு வழிப்பாதை விதிமுறைகள் மீறப்படுவதால், போக்குவரத்திற்கு கடுமையான இடையூறு ஏற்படுவது அனைவரும் அறிந்தது.
இது குறித்து மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை நகரில் மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக - ஒரு வழிப்பாதையில் மூன்று / நான்கு சக்கர வாகனங்கள் விதிமுறைகளை மீறி செல்வது குறித்தும், சாலையோரங்களில் முறையற்ற வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்தும் - பல்வேறு வகைகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் - இந்த விதிமீறல்கள் பெரிய அளவில் குறையவில்லை.
இதன் காரணமாக - பேருந்துகள் இந்த சாலை வழியினை பயன்படுத்துவதிலும், ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகள் போக்குவரத்திலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.
இது குறித்து காவல்துறையிடம் பலமுறை முறையிடப்பட்டுள்ளது. இதற்கு பதில் வழங்கும் காவல்துறை உயர் அதிகாரிகள், நகரின் சில அமைப்புகள் - விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என வேண்டுகோள் வைப்பதாக கூறுகிறார்கள். இது ஏற்புடையது அல்ல.
பிரச்சனை நாளுக்குநாள் அதிகரித்துவருவதை கருத்தில்கொண்டு, பேருந்துகள் செல்லும் வழியில் உள்ள நான்கு முக்கிய சந்திப்புகளில், போக்குவரத்து காவலர்கள் நிறுத்தப்பட்டு - வாகனங்கள் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை மெகா அமைப்பு சார்பாக - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு அருண் பாலகோபாலன் IPS அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள நான்கு சந்திப்புகள் - சிங்கர் ஸ்டோர் சந்திப்பு, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சந்திப்பு, பேருந்து நிலையம் சந்திப்பு மற்றும் ஐ.ஓ.பி. வங்கி சந்திப்பு ஆகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|