காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையார் பள்ளி சந்திப்பிலுள்ள பழுதடைந்த மின்மாற்றி அகற்றப்பட்டு, புதிய தூண்கள் நிறுவப்பட்டுள்ளது. மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பினது கோரிக்கையின் எதிரொலியாக இது நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
கோமான் மொட்டையார் பள்ளி அருகில் உள்ள மின்மாற்றி (TRANSFORMER) மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது என்ற தகவல், அப்பகுதி மக்கள் மூலம் பெறப்பட்டதை அடுத்து - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக - அந்த மின்மாற்றியினை மாற்றிடக் கோரி - சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையின் உயர் அதிகாரிகளிடம் - சென்னை, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் வழங்கப்பட்டது.
பழுதடைந்த மின்மாற்றியினை பார்வையிட்ட அதிகாரிகள் அதனை மாற்றிட ஒப்புதல் அளித்தாலும், பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக இந்த பணி நடந்தேற காலதாமதம் ஆகிவந்தது.
மெகா அமைப்பு நிர்வாகிகள் தொடர்ந்து இது குறித்து - பலமுறை நேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து - இதன் ஆபத்தினை எடுத்துரைத்த வண்ணம் இருந்தனர். கடந்த வாரம் மீண்டும் இது குறித்து - தூத்துக்குடியில் உள்ள மின்வாரியத்துறையின் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் திருச்செந்தூரில் உள்ள செயற்பொறியாளர் ஆகியோரை - இது விஷயமாக தொடர்புக்குக்கொண்டு - ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த பணியினை உடனடியாக செய்து முடித்திட வலியுறுத்தினர்.
அதன் பயனாக - இன்று, கோமான் மொட்டையார் பள்ளி அருகில் உள்ள மின்மாற்றி - மாற்றப்பட்டு, புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |