இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து இந்தியா முழுக்கவும் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் - கண்டன ஆர்ப்பாட்டம், கண்டனப் பேரணி, எதிர்ப்பு அடையாள அட்டை அணிதல், பள்ளிவாசல்களில் சிறப்புப் பிரார்த்தனை என தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பின் வரிசையில், கடந்த 29.01.2020. புதன்கிழமையன்று 19.00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் குடியுரிமைத் திருத்தச் சட்ட விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்துரையாற்றினார். “குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதன் விளைவுகளும்” எனும் தலைப்பில் - தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன், “இந்தியாவின் உருவாக்கத்தில் முஸ்லிம்களின் பங்கு” எனும் தலைப்பில் – இந்திய தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்குத் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக அன்று காலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் – காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் உள்ள ஐக்கியப் பேரவை அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து உரையாற்றிச் சென்றார். அதில் நகரப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
|