காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணித்துச் செல்லும் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் நகர் முழுக்க சுவரொட்டி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் - தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். தமிழகத்தில் உள்ள ஆறு அரசு போக்குவரத்துக்களில், நான்கு அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் (திருநெல்வேலி, மதுரை, கும்பக்கோணம், கோவை) - காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன.
அவற்றில் ஒரு சில பேருந்துகள் அடைக்கலாபுரம் வழியாக இயக்கப்படவேண்டும்; அவற்றை தவிர, பெருவாரியான பேருந்துகள் காயல்பட்டினம் வழியாக இயக்கப்படவேண்டும். ஆனால் - கடந்த பல ஆண்டுகளாக, அரசு பேருந்துகள் - காயல்பட்டினம் வழியை, பெருவாரியான எண்ணிக்கையில் - புறக்கணிக்கின்றன.
இப்பிரச்சனை குறித்து மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - 2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
(1) மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்களிடம் மனு
(2) திருச்செந்தூர் பேருந்து நிலையம் வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
(3) காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேர பேருந்துகள் வருகை கண்காணிப்பு
(4) பேருந்துகள் கால அட்டவணை - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டு - இணையத்தில் வெளியீடு
(5) மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் பேருந்து நிலையங்களில் தகவல் பலகை நிறுவுதல்
(6) மேலாண்மை இயக்குனர்களை கும்பக்கோணம், மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவையில் நேரடியாக சந்திப்பு,
(7) வழி காயல்பட்டினம் ஸ்டிக்கர்கள் பேருந்துகளில் ஒட்டியது,
(8) வட்டார போக்குவரத்து அலுவலர், தொடர் கண்காணிப்பு மற்றும் மெகா அமைப்புடன் இணைந்து ஆய்வு கூட்டம் நடத்தவேண்டும் என போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவு வெளியீடு
மெகா அமைப்பின் இந்த கோரிக்கைகளை அடுத்து ஒரு சில தினங்கள் - பெருவாரியான பேருந்துகள் காயல்பட்டினம் வழியாக செல்லும்; அதன் பிறகு மீண்டும் புறக்கணிப்பு துவங்கும். சில பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதிப்பார்கள். சில ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு சில வாரங்களுக்கு பிறகு - மீண்டும் அப்பிரச்சனை துவங்கும்.
இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், காயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் பேருந்துகள் மீது - நுகர்வோர் நீதிமன்றத்தில் (CONSUMER COURT) வழக்குகள் தொடர - சட்ட வல்லுனர்களின் ஆலோசனைப்படி - மெகா அமைப்பு முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி 16 க்கு பிறகும், அரசு பேருந்துகள் காயல்பட்டினம் வழியை புறக்கணிப்பது தொடர்ந்தால் - சம்பந்தப்பட்ட பேருந்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் ஓட்டுநர்/நடத்துனர் ஆகியோர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குகள் - இறைவன் நாடினால் - பதிவு செய்யப்படும்.
இந்த தகவல் - ஏற்கனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது - இந்த தகவல், சுவரொட்டிகளாக - தூத்துக்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில், மெகா அமைப்பு சார்பாக ஒட்டப்படுகிறது.
காயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணிப்பதால் பாதிக்கப்படும் பயணியர், நஷ்டஈடு கோரி - நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர - மெகா அமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்கும். இது குறித்த விரிவான தகவல், அடுத்த சில தினங்களில் - இறைவன் நாடினால் - வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|