கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களை நடைமுறைக்கு மாற்றமாக – காவல் நிலையத்திற்கு அழைக்காதிருக்க ஆவன செய்யுமாறு, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
கடவுசீட்டு (PASSPORT) விண்ணப்பம் செய்த பிறகு, விண்ணப்பதாரரின் விபரங்கள் - அவர் வசிக்கும் இடத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டு - காவல் நிலையத்தின் அறிக்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படுவது நடைமுறை.
பொதுவாக - மாநிலத்தின் அநேக பகுதிகளில் - காவல்துறையின் இந்த விசாரணை, அவரவர் வீடுகளுக்கு, இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள காவலர் ஒருவர் நேரில் சென்று நடைபெறுகிறது.
இருப்பினும் - காயல்பட்டினம் பகுதியில், கடவுசீட்டு விண்ணப்பதாரர்கள் - ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு அழைக்கப்படும் நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் - கடவுசீட்டு விண்ணப்பதாரர்கள் - குறிப்பாக பெண்கள், வயதானோர், குழந்தைகள் - சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள்.
இது குறித்து - சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், நகர அமைப்புகள் பலமுறை முறையிட்ட பிறகும், இந்த நடைமுறை தொடருகிறது.
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - சில தகவல்கள் - சென்னையில் உள்ள காவல்துறை தலைமை நிலையத்தில் (DGP OFFICE) கோரப்பட்டது. அதற்கு பெறப்பட்ட பதில்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பொது தகவல் அலுவலர், சென்னை பெருநகர காவல் அலுவலகம் வழங்கியுள்ள பதிலில் - கடவுசீட்டு கோரும் விண்ணப்பதாரர் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்துக்கொள்ளவும், அவர் மீது குற்ற நடவடிக்கை ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளவும் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும், கடவுசீட்டு விண்ணப்பம் சரிபார்ப்பு சம்பந்தமாக விண்ணப்பதாரர் எவரும் காவல்நிலையத்திற்கு செல்லும் வழக்கம் ஏதும் நடைமுறையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெறப்பட்டுள்ள பதிலினை அடிப்படையாக கொண்டு, கடுவுசீட்டு விண்ணப்பதாரர்களை ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கவேண்டாம் என வேண்டுகோள் வைத்து - மனு ஒன்று, இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு அருண் பாலகோபாலன் IPS அவர்களிடம் இன்று - மெகா அமைப்பு சார்பாக - வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|