காயல்பட்டினத்தின் சில பகுதிகளில் பழுதடைந்த நிலையிலுள்ள மின்மாற்றிகளை அகற்றி, புதிய மின்மாற்றிகளை அமைக்காமல் காலந்தாழ்த்துவதாகவும், விரைந்து செய்து தருமாறும், தமிழ்நாடு மின்வாரிய உயரதிகாரிகளிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் உள்ள மின் இணைப்புகளுக்கு, குறைந்த அழுத்த (LOW VOLTAGE) மின் விநியோக பிரச்சனைகள் காரணமாக, முறையாக மின் விநியோகம் செய்யமுடியாத சூழல் நீண்ட காலமாக நிலவுகிறது. இதனால் அவசியமான மின்சாதனங்களை இயக்க முடியாமலும், மின் சாதனங்கள் பழுதடையும் சூழலும் நிலவுகிறது.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள், மின்வாரியத்தை அணுகியபோது, புதிய மின்மாற்றி (TRANSFORMER) பொருத்துவதே இதற்கு தீர்வு என தெரிவித்தனர். புதிய மின்மாற்றி நிறுவ தற்போது போதிய இடம் அப்பகுதியில் உள்ளது.
இது சம்பந்தமாக - கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் TRANSFORMER நிறுவப்படும் என்ற பதில் வழங்கப்படுகிறதே தவிர, இது வரை எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமம் அடைந்து வருகிறார்கள்.
காயல்பட்டினம் கோமான் மொட்டையார் பள்ளிவாசல் அருகில் உள்ள மின்மாற்றி (TRANSFORMER) மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இது குறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பலமுறை கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது என கூறியே பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இது வரை இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின்வாரியத்துறையின் இந்த அலட்சியம் மனவருத்தத்தை அளிக்கிறது.
எனவே - மேலும் காலம்தாழ்த்தாமல் இவ்விரு பகுதிகளிலும், உடனடியாக புதிய மின்மாற்றி நிறுவிட வேண்டி, மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் (SUPERINTENDING ENGINEER) அவர்களிடமும், திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் (EXECUTIVE ENGINEER) அவர்களிடமும் இன்று முறையீட்டு மனு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|