காயல்பட்டினம் சுலைமான் நகர், தேங்காய் பண்டகசாலை சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளைக் கேட்கும் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் கோரிக்கை, நடவடிக்கைக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
சுலைமான் நகர் (மாட்டுக்குளம்), தேங்காய்ப்பண்டக சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களாக - சாலை வசதி, தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், அப்பகுதி மக்கள் - கடுமையான சிரமத்தில் உள்ளார்கள். மழைக்காலங்களில் - இதனால் பிரச்சனைகள் பல மடங்கு அதிகரிக்கின்றன.
இது குறித்து பலமுறை - காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதை அடுத்து - விரிவான கோரிக்கை மனு, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக சில வாரங்களுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த மனுவினை பரிசீலனை செய்த அச்சிறப்பு பிரிவு, அந்த மனுவில் உள்ள கோரிக்கைகளை முறையாக பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க கோரி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|