காயல்பட்டினத்தில் தெருநாய் பிடிப்பு நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாகவே செய்யப்பட்டுள்ளதாக காயல்பட்டினம் நகராட்சியைக் குற்றஞ்சாட்டி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் நீண்ட நாட்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் - கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து - பலமுறை மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா), சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளது. இருப்பினும் - பல லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆவணங்களில் காண்பிக்கப்பட்டாலும், இதற்கான முறையான தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம், மெகா அமைப்பு ஏற்பாட்டில் - அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் ஒன்று சீதக்காதி திடலில் நடத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகியவுடன், கண் துடைப்பு நடவடிக்கையாக சில தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. நகரின் பல பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரி - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகும் *காயல்பட்டினம் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது சம்பந்தமாக நினைவூட்டல் கடிதம் அனுப்பிய பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், காயல்பட்டினம் நகராட்சியினை கண்டித்து எதிர்வரும் ஜனவரி 24 வெள்ளியன்று - காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி கோரி - முறையாக, மெகா அமைப்பு, சார்பாக காவல்துறையிடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் - இன்று காலை முதல், மீண்டும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை காயல்பட்டினம் நகராட்சி அரங்கேற்றிவருகிறது. இன்று சுலைமான் நகர் (மாட்டுக்குளம்) உட்பட சில பகுதிகளில், சில தெரு நாய்கள் - நகராட்சி ஏற்பாடு செய்திருந்த ஒப்பந்ததாரர் மூலம் பிடிக்கப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|