காயல்பட்டினத்தில் தெருநாய் பிடிப்பு நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்புக்காகச் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, நகராட்சி நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்திட காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து - பலமுறை காயல்பட்டினம் நகராட்சியிடம் முறையிட்டும், இதுவரை கண்துடைப்பு நடவடிக்கைகளையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிரந்தர தீர்வு வழங்காத நகராட்சியினை கண்டித்து, ஜனவரி 24 அன்று மாலை, நகராட்சி அலுவலகம் வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக, முறையாக - மூன்று வாரங்களுக்கு முன்பே - ஆறுமுகநேரி காவல் நிலையத்திடம் - அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு நாள் மட்டும் இருக்கும் நிலையில், இன்று மதியம் ஆறுமுகநேரி காவல் நிலையத்திடம் இருந்து கடிதம் ஒன்று பெறப்பட்டது.
அதில் - நகராட்சி அலுவலகம் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி மறுக்கப்பட்டு, சீதக்காதி திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலகம் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்நிலையத்தின் இந்த பதில் ஏற்புடையது அல்ல. கடந்த காலங்களில் - காயல்பட்டினம் நகராட்சி வாயிலில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
போதிய கால அவகாசம் இல்லாமல், ஒரு தினத்திற்கு முன்பு இந்த பதில் வழங்கப்பட்டுள்ளதால், நாளை நடத்திட திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், மீண்டும் - இறைவன் நாடினால் - முறையாக விண்ணப்பம் செய்யப்பட்டு, இன்னொரு தேதி அறிவிக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|