கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் காவலருக்குப் பணம் கொடுக்க அவசியமில்லை என – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை பதிலளித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
கடவுசீட்டு (PASSPORT) விண்ணப்பம் செய்த பிறகு, விண்ணப்பதாரரின் விபரங்கள் - அவர் வசிக்கும் இடத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டு - காவல் நிலையத்தின் அறிக்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படுவது நடைமுறை.
இந்த விசாரணை முடிந்தவுடன் - சில காவல்நிலையங்களில், விண்ணப்பதாரரிடம் பணம் கோரும் வழமையுள்ளது. இதற்கு எந்த ரசீதும் தருவதில்லை.
LOCAL CIRCLES என்ற தளம் சமீபத்தில் நடத்திய நாடுதழுவிய ஆய்வில் - 46 சதவீதம் பேர், கடவுசீட்டு பெற லஞ்சம் வழங்கிய அனுபவம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கட்டணம் பகுதிக்கு, பகுதி, ஆளுக்கு, ஆள் - வேறுபடும்.
இது குறித்து, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக - சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தின் பொது தகவல் அலுவலரிடம் - தகவல் கோரப்பட்டது.
அதற்கு பதில் வழங்கிய சென்னை பெருநகர காவல் அலுவலகம் - பொது தகவல் அலுவலர், கடவுசீட்டு சரிப்பார்ப்பு சேவைக்கு கட்டணம் பெறும் நடைமுறை இதுநாள் வரை வழக்கத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|