காயல்பட்டினம் நகராட்சியின் அலட்சியம் காரணமாக, அஞ்சல் நிலைய அலுவலகம் ஊரின் ஒதுக்குப்புறப் பகுதிக்கு மாறிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, கூடுதல் இடம் வழங்கி – ஊருக்குள்ளேயே அஞ்சல் நிலையம் அமைந்திட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
நகரின் பிரதான சாலையில் - 1953 ஆம் ஆண்டு முதல் - காயல்பட்டினம் தபால் நிலையம் இயங்கிவருகிறது. ஏறத்தாழ 65 ஆண்டுகளாக ஒரே கட்டிடத்தில் இயங்கி வரும் தபால் நிலையம், கட்டிடம் பழுதடைந்துள்ள காரணத்தால் - காலி செய்து வேறு இடத்திற்கு செல்ல கட்டிட உரிமையாளர்கள், தபால்துறையிடம் பல ஆண்டுகளாக கோரி வருகிறார்கள். பல ஆண்டுகளாக மாற்று இடத்தினையும், தபால்துறையும் தேடிவருகிறது.
2016 ஜூலை மாதம் - பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள காலியிடத்தில், தபால் நிலையத்திற்கான கட்டிடத்தை கட்டிட - நகர்மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று மாதங்களில் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள் நகர்மன்றத்தில் இல்லை. அதன் பிறகு - நகராட்சி அதிகாரிகள் அந்த கோரிக்கையை கண்டுக்கொள்ளவில்லை.
2017 ஆம் ஆண்டு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - பேருந்து நிலையத்தில் உள்ள காலியிடத்தில் - இக்கட்டிடத்தை கட்டி, தபால் நிலையத்திற்கு வாடகைக்கு வழங்க கோரிவந்துள்ளது.
பேருந்து நிலைய வளாகம் பொருத்தமான இடம் என்பதாலும், வேறு இடம் கிடைக்கவில்லையென்றால் நகரின் ஒதுக்குப்புறத்திற்கு தபால் நிலையம் சென்றுவிட வாய்ப்புள்ள காரணத்தினாலும், நூற்றுக்கணக்கான மக்களும், நகரின் அனைத்து ஜமாஅத்துகளும். பொது நல அமைப்புகளும் இக்கோரிக்கையை ஆதரித்து கையெழுத்தும் வழங்கியுள்ளார்கள்.
ஆனால் - மக்கள் நலனுக்கு தொடர்ந்து விரோதமாக செயல்புரிந்து வரும் காயல்பட்டினம் நகராட்சி, இந்த கோரிக்கையை அலட்சியம் செய்துவந்தது.
சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA), மாவட்ட ஆட்சியர் உட்பட உயர் அதிகாரிகளை சந்தித்து மெகா அமைப்பு இக்கோரிக்கையினை வலியுறுத்திய பிறகு - பேருந்து நிலைய வளாகத்தில், புதியகட்டிடம் கட்டிட - நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி, ஒப்பந்தப்புள்ளியும் கோரியது. மாவட்ட ஆட்சியரும் ஜூலை 2018 இல் இவ்விடத்தை நேரில் பார்வையிட்டார்.
இதற்கிடையே - தூத்துக்குடி மாவட்ட தலைமை தபால்துறை கண்காணிப்பாளர் (Senior Superintendent of Post; SSP) - எழுத்துப்பூர்வமாக - மாவட்ட ஆட்சியருக்கும், நகராட்சி ஆணையருக்கும் - எந்த அளவில் இடம் தேவை உள்ளது [1364 சதுர அடி (அலுவலகம்) + 480 சதுர அடி (தங்குமிடம்)] என்ற விபரத்தையும் தெரிவித்திருந்தார். மேலும் - தபால்துறை அதிகாரிகளும், மெகா நிர்வாகிகளும் - பலமுறை நேரடியாக - காயல்பட்டினம் நகராட்சியில் இது குறித்து விளக்கமும் வழங்கிவந்தனர்.
போதிய காலியிடம் இருந்தபட்சத்திலும், திட்டமிட்டே - அளவுக்குறைவாக (1000 சதுர அடிக்கும் கீழ்) புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது; வசதியாக தபால் நிலையம் இயங்க இந்த இடம் போதுமானது கிடையாது. இது குறித்து, தபால்நிலைய அதிகாரிகள் - நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டதற்கு, அலட்சியமான பதிலினை அவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ரேஷன் கடைக்கும், புதிய கட்டிடத்திற்கும் இடையில் - போதிய காலியிடம் உள்ளது; அவ்விடத்தில் - தபால் நிலையத்திற்கு தேவையான கூடுதல் இடத்தினை கட்டி வழங்கிட கோரி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS அவர்களிடம், மெகா அமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|