காயல்பட்டினம் நகரின் பல்வேறு இடங்களில் 136 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலைகள் அமைக்க காயல்பட்டினம் நகராட்சி ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. அதில் அலியார் தெருவும், கி.மு.கச்சேரி தெருவும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டதாக - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் 14வது மத்திய நிதிக்குழு (CFC) மானியம் நிதி மூலம், 136 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. 20-2-2020 அன்று தமிழக அரசின் eTENDER இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தப்புள்ளிகள், 28-2-2020 அன்று மாலை 3:30 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தெருக்கள் வருமாறு:
// விசாலட்சியம்மன் கோவில் தெரு முதல் பப்பரப்பள்ளி வரை - ரூபாய் 48 லட்சம்
// ரத்தினாபுரி முதல் பப்பரப்பள்ளி வரை - ரூபாய் 47 லட்சம்
// ஆசாத் தெரு - ரூபாய் 20 லட்சம்
// பண்டகசாலை காரனார் தெரு (தீவு தெரு) - ரூபாய் 21 லட்சம்
அலியார் தெரு, குத்துக்கல் தெரு, கீ.மு.கச்சேரி தெரு, குறுக்கு தெரு உட்பட நகரின் பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலைகள் குறித்து பலமுறை நினைவூட்டல் கொடுக்கப்பட்டும் மீண்டும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கும் உடனடியாக தரமான தார் சாலைகள் போட வேண்டி - இன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (i/c) திருமதி புஷ்பலதா அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|