காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், தீவுத்தெரு முனையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது எல்.கே.துவக்கப்பள்ளி.
கிழக்குப் பகுதி வட்டாரத்திலிருந்து பள்ளிக்கூடம் செல்லும் சிறுவரின் பாதுகாப்பு மற்றும் இலகுவைக் கவனத்தில் கொண்டு, முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டிரண்டு பிரிவுகள் இப்பள்ளிக்கூட வளாகத்தில் செயல்பட்டு வந்தன. எஞ்சிய இரண்டு பிரிவுகள் - அப்போது பிரதான பள்ளிக்கூடமாக செயல்பட்டு வந்த – தற்சமயம் எல்.கே.மேனிலைப்பள்ளி செயல்பட்டு வரும் இடத்திலிருந்த - ‘தாமரை ஸ்கூல்‘ என்று அழைக்கப்பட்டு வந்த பள்ளிக்கூடத்தில் செயல்பட்டு வந்தன.
மெட்ரிகுலேஷன் கல்வியின் மீது பெற்றோருக்கு இருக்கும் தீராத மோகம் காரணமாக, இப்பள்ளிக்கூடத்திலிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து வந்தனர்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு வகுப்பிற்கு வெறும் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த மாணவர்களையும், தமது பணியிடத்தைப் பாதுகாத்திடும் பொருட்டு அன்றிருந்த வகுப்பாசிரியர்கள் தம் சொந்தச் செலவில் தானியங்கி (ஆட்டோ) வாகனம் ஏற்பாடு செய்து அம்மாணவர்களை பல்வேறு இடங்களிலிருந்து அழைத்து வர வேண்டிய நிலையிருந்தது.
காலப்போக்கில் அதுவும் இல்லாமலானதால், இப்பள்ளிக்கூடத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் அரசால் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டனர்.
கடந்த பல காலமாக எவ்வித செயல்பாடும் இல்லாதிருந்த இப்பள்ளிக்கூட வளாகத்தில், பெருச்சாளி, நாய், பாம்பு என பலவும் குடியேற்றம் கண்டன. அவ்வப்போது சிலர் உள்ளே வருவதும் போவதுமாக இருந்த இக்கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாகிவிடுமோ என்ற அச்சம் சுற்றுவட்டாரத்திலிருக்கும் இல்லங்களைச் சார்ந்தோருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், இப்பள்ளிக்கூட கட்டிடம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டு, தற்சமயம் வெற்றிடமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
பல்லாண்டு காலமாக இப்பகுதி மக்களுக்கு கல்வி வழங்கி, மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குறைஞர்கள் என பல திறமைமிக்கவர்களை உருவாகக் காரணமாயிருந்த இப்பள்ளிக்கூட வளாகத்தில், அடுத்து என்ன வரப்போகிறது என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். |