மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான படிப்புதவித் திட்டத்தின்கீழ் (Central Sector Scheme of Scholarship for College and University Students) 2010 - 2011 கல்வி ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு சேர்ந்து பட்டப்படிப்பு / தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் கல்வி உதவித்தொகையினைப் பெற்றிட தகுதியுள்ள மாணவ/மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்து www.tn.gov.in/dge என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் 2010 - 2011 கல்வியாண்டில் முதலாமாண்டு சேர்ந்து இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000/- வீதமும், அவர்கள் தொடர்ந்து முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும்போது மாதம் ரூ.2000/- வீதமும் அளிக்கப்படும். மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வியில் முதலாமாண்டு சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதமும், நான்காவது மற்றும் ஐந்தாவது வருடங்களில் மாதம் ரூ.2000/- வீதமும் அளிக்கப்படும். ஒரு கல்வியாண்டில் பத்து மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு, மாநில பள்ளித் தேர்வு வாரியத்திற்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள படிப்புதவித் தொகைக்கான பயனாளிகளின் எண்ணிக்கை 4883 ஆகும். ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் 50% மாணவர்களுக்கும், 50% மாணவியருக்கும் இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பயனாளிகள் பாடத்தொகுதிகளின் படிநிலை பட்டியலின்படியும், மத்திய அரசின் இனவாரியான ஒதுக்கீடு விதிகளின்படியும் தெரிவு செய்யப்படுவார்கள்.
அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்பட்ட 2010, மேல்நிலைப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று கீழ்க்குறிப்பிட்டுள்ள 80 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று, விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்திய தேசத்தினராகவும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000/-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
முக்கியக் குறிப்பு: மார்ச் 2010 மேல்நிலைத் தேர்விற்கு, அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண்ணை (Register Number) இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பத்தினை படியிறக்கம் (download) செய்துகொள்ள இயலும்.
முழுமையான விபரங்களுக்கு www.tn.gov.in/dge என்ற இணையதளத்தினைப் பார்வையிட்டு, தகுதிகளை நிறைவு செய்யும் மாணவ/மாணவியர் விண்ணப்பத்தினைப் படியிறக்கம் (download) செய்து, முழுமையாக பூர்த்தி செய்து, விண்ணப்பத்தில் கோரப்பட்ட அனைத்து இணைப்புகளுடன் கீழ்க்காணும் முகவரிக்கு 16.11.2010க்குள் கிடைக்கும் வகையில் பதிவஞ்சல் / துரித அஞ்சல் மூலம் மட்டுமே சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அஞ்சலக கால தாமதம் (Postal Delay) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேரடியாகவும் மற்றும் தனியார் கொரியர் மூலமும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முக்கியக் குறிப்பு வ.எண் 1 முதல் 7 வரை குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்பப்படவேண்டிய முகவரி:
இணை இயக்குனர் (மேல்நிலை),
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
டி.பி.ஐ.வளாகம், கல்லூரிச் சாலை,
சென்னை - 600 006.
விண்ணப்ப உறையின் மீது (Central Sector Scheme of Scholarship for College and University Students) என அவசியம் தலைப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 16.11.2010க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்களும் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் எவ்வித முன்னறிவிப்புமின்றி கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள்:
1. பிற மாநில கல்வி வாரியத்தில் பயின்றோர்
2. 80% சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றோர்
3. March - 2010க்கு முன்னர் தேர்ச்சி பெற்றோர்
4. காலதாமதமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள்
5. இவ்வறிவிப்பிற்கு முன்னர் விண்ணப்பம் செய்தவர்கள்
6. முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள்
7. இணையதளத்திலிருந்து (08.11.2010 முதல் 12.11.2010 வரை) படியிறக்கம் செய்யப்படாத விண்ணப்பங்கள், ஒளிநகல் மற்றும் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பங்கள்.
தகவல்:
செய்யது ஹெச். ஏ. இஸ்மாயில் |