காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவையொட்டியுள்ள தருவை பகுதியிலுள்ள ஒரு நிலப்பகுதி குளம் என்றும், அக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், குளத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சிலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 25.10.2010 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்வில் ஆர்ப்பாட்டம் நடத்தி, கோரிக்கை மனுவும் அளித்தனர்.
சம்பந்தப்பட்ட அவ்விடம் குளமல்ல என்றும், உள்நோக்கத்துடன் ஒருசிலர் இதைப் பிரச்சினையாக்குவதாகவும் அவ்விடத்தின் ஆவண உடமைக்காரரான - காயல்பட்டினம் இசக்கி மரக்கடை நிறுவனத்தின் அதிபர் ஆர்.இ.பெருமாள் நம்மிடம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த விபரங்கள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தெருவிலுள்ளது எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலம். நாங்கள் இந்நிலத்தை கிரயத்திற்கு வாங்கும் முன் இங்கு தனியார் சிலர் இந்நிலத்திலிருந்து வண்டி வண்டியாக மணல் அள்ளிச் சென்று, வெளியிடங்களில் விற்பனை செய்து வந்துள்ளனர். அதன் காரணமாக அப்பகுதி பெரும் பள்ளமாக உருவெடுத்து, எல்லாக் காலங்களிலும் அப்பகுதியின் கழிவு நீரும், மழைக்காலங்களில் மழை நீரும் தேங்கி குளமாகக் காட்சியளிக்கிறது.
இந்நிலம் சண்முகம்பிள்ளை குளம் என்ற பெயரிலான ஒரு குளம் என்றும், நாங்கள் அதை ஆக்கிரமிப்பதாகவும் சிலர் எங்களுக்கெதிராக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.
இவ்விடத்தை நாங்கள், காயல்பட்டினம் தைக்காத் தெருவைச் சார்ந்த ஜனாப் ஷாஃபீ சகோதரர்களிடமிருந்து கிரயத்திற்கு வாங்கினோம். வாங்குவதற்கு முன்பே, அவ்விடம் குறித்த வில்லங்கங்களை சரிபார்ப்பதற்காக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காயல்பட்டினம் நகராட்சிக்கு கடிதம் எழுதி, அவ்விடம் குறித்து விபரம் கேட்டிருந்தோம். அந்நிலம் குறித்த ஆவணங்கள் திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகத்திலிருந்த காரணத்தால், நகராட்சியிலிருந்து எனது கடிதத்தை திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அவர்கள் ஃபார்வர்ட் செய்தனர்.
திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்திலிருந்து எமக்கு அனுப்பப்பட்டு, தற்சமயம் எங்கள் கைவசமுள்ள கடிதத்தில், மேற்படி இடம் பட்டா நிலம்தான் என்றும், கடந்த 60 ஆண்டுகளில் எந்த வில்லங்கமும் இதிலில்லை என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலைப் பார்ப்பதை விட பால் இருக்கும் பாத்திரத்தைப் பார்த்து முடிவெடுப்பது என்ற அடிப்படையில், தைக்கா தெருவைச் சார்ந்த கண்ணியமிக்க ஒரு குடும்பத்தாரிடமிருந்து முழு நம்பிக்கையுடனேயே நாங்கள் இந்நிலத்தைக் கிரயத்திற்கு வாங்கியிருக்கிறோம்.
நிலம் வாங்கும்போது பேணப்படும் முறை என்ற அடிப்படையில், 1950 முதல் 1970 வரையிலும், 1970 முதல் 1986 வரையிலும், 1987 முதல் 2010 வரையிலும் தனித்தனியே வில்லங்கங்கள் பார்க்கப்பட்டு, இந்நிலத்தில் வில்லங்கம் எதுவும் இல்லை, இது பட்டா நிலம் என தெளிவுற தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் எங்களிடமுள்ளது.
உண்மை இப்படியிருக்க, இவ்விடத்தைப் பிரச்சினையாக்கி ஆதாயம் காண நினைக்கும் ஒரு சிலர், சி.பா.ஆதித்தனார் குளத்தை மீட்கக் கோரும் பொருட்டு, 05.11.2010 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன் தட்டிப்பலகை நிறுவியிருந்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் 25.10.2010 அன்று முறையிடும்போது “சண்முகம்பிள்ளை குளமாக” இருந்தது, ஒரு வார காலத்திற்குள் “சி.பா.ஆதித்தனார் குளமாக” மாறிவிட்டது எப்படி என்று எங்களுக்குத் தெரியவில்லை.
இவர்களின் இந்தப் போராட்ட அறிவிப்பையடுத்து, தாசில்தார் அவர்கள் 20 பேர் அடங்கிய போராட்டக் குழுவை 03.11.2010 அன்று அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர், அரசு ஆவணங்களின் படி இது பட்டா நிலம் என்பது தெளிவாக உள்ளதாகவும், 1930ஆம் ஆண்டில், ப்ரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே இவ்விடம் பட்டா நிலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இடம்தான் என்றபோதிலும், கழிவு நீர் ஓட்டத்திற்காக என எங்கள் சொந்தச் செலவிலேயே மூன்றடி அகலத்தில் ஓடை வெட்டி விட்டுள்ளோம்.
இதுகுறித்து அவர்களிடம் தெரிவித்த தாசில்தார் அவர்கள், வேண்டுமானால் அவர்களிடம் இன்னும் 3 அடி அகலப்படுத்தி ஓடையை வெட்டி விட கோரிக்கை வைக்கலாம்... அதை விட்டுவிட்டு போராட்டங்கள் செய்வது பொருத்தமற்றது என்று தெரிவித்து, போராட்டம் செய்ய மாட்டோம் என அவர்களிடம் உறுதிமொழி கேட்டு கையொப்பமிடச் சொல்லியிருக்கிறார். 20 பேர் கொண்ட அக்குழுவில் 16 பேர் கையொப்பமிட்டு, மேலும் பிரச்சினையாக்காமல் ஒதுங்கியிருக்க, எஞ்சிய நால்வர் மட்டும் உள்நோக்கத்துடன் எங்களுக்கெதிராக பிரச்சினை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலத்தின் உண்மை நிலை குறித்து, நாங்கள் தினமலர் நாளிதழில் வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அந்நிலத்தை விற்ற காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சார்ந்த ஹாஜி ஷாஃபீ இதுகுறித்து நம்மிடம் தெரிவிக்கையில், அது தனது தந்தை வாங்கிய சொத்து என்றும், எவ்வித வில்லங்கமும் இல்லாத புஞ்சை பட்டா நிலமாகவே வாங்கியதாகவும், அந்த நிலையிலேயே கிரயத்திற்கு விற்றுள்ளதாகவும், அந்நிலத்தில் வேறு யாருக்கும் எவ்வித உரிமையும் இல்லை என்றும், அந்நிலம் தங்கள் உடமையில் இருந்தபோது அதை ஆக்கிரமிக்கும் பொருட்டு சுற்றுவட்டாரத்திலுள்ள சிலர் குச்சியை நாட்டியபோது அதனைத் தான் தடுத்து நிறுத்தி, அவர்களை அப்புறப்படுத்தியதாகவும் தெரிவித்தார். |