துல்ஹஜ் மாத அமாவாசை நவம்பர் 6 சனி அன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 4:52 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் காலை 10:22 மணி. IDL க்கு கிழக்காக தென் பசிபிக் கடலின் ஒரு பகுதியிலும், தெற்கு தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பிறையை காணலாம். தொலைநோக்கிகள் உதவி கொண்டு தென் அமெரிக்காவின் வட பகுதியிலும் பிறையை காணலாம்.
காயல்பட்டணத்தில் சூரியன் அன்று மாலை 5:55 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 5:59. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 7.5 மணி நேரம். சூரியன் மறைந்து நான்கு நிமிடங்கள் கழித்து சந்திரன் மறைந்தாலும், சூரியனுக்கு மிகவும் அருகாமையில் இருப்பதால் கண்ணுக்கு புலப்படாது. சவுதியிலும் இதே நிலையே.
பிறை பிறப்பை கணக்கிட்டு கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளவர்க்கு நவம்பர் 16 அன்று ஹஜ் பெருநாள் ஆகும். நவம்பர் 7 துல்ஹஜ் முதல் நாள் ஆகும்.
நவம்பர் 6 அன்று தென் பசிபிக் கடலின் ஒரு பகுதியிலும், தெற்கு தென் அமெரிக்காவிலும் பிறை காண வாய்ப்பு இருந்தாலும் அப்பகுதிகளில் இருந்து தகவல் உரித்த நேரத்தில் வர வாய்ப்புகள் மிகக்குறைவு. எனவே உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் அதனை எடுத்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளவர்க்கு நவம்பர் 8 துல்ஹஜ் முதல் நாள் என்றும், நவம்பர் 17 அன்று பெருநாள் வரவும் வாய்ப்புள்ளது.
இருப்பினும் நவம்பர் 6 அன்றே பிறை காணப்பட்டுவிட்டதாக வேறு எங்கிருந்தேனும் தகவல் வந்து விட்டால் உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் அதனை எடுத்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளவர்க்கு நவம்பர் 16 அன்றே ஹஜ் பெருநாள் வந்துவிடும். நவம்பர் 7 துல்ஹஜ் முதல் நாள் ஆகும்.
நவம்பர் 7 ஞாயிறு அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:54 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:56. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 31.5 மணி நேரம். சூரியன் மறைந்து 62 நிமிடங்கள் கழித்து சந்திரன் மறைவதால் கண்ணுக்கு எளிதாக புலப்படும். வட அமெரிக்காவின் வடகோடி, வடக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசியா தவிர உலகெங்கும் பிறையை காணலாம். காயல்பட்டணத்தில் நவம்பர் 7 ஞாயிறு அன்று பிறை தென்பட வாய்ப்பு உள்ளதால் - பிறை அந்தந்த பகுதிகளில் காணப்பட வேண்டும் என்ற கருத்தில் (காயல்பட்டணத்தில்) உள்ளவர்க்கு நவம்பர் 17 அன்று ஹஜ் பெருநாள் இருக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும் தற்போது நிலவிவரும் மழை சூழலால் நவம்பர் 7 அன்று பிறை காயல்பட்டண சுற்று வட்டாரத்தில் வெறுங்கண்ணுக்கு தென்படாவிட்டால் - பிறை அந்தந்த பகுதிகளில் காணப்பட வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர் துல்கைதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நவம்பர் 18 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு நவம்பர் 9 துல்ஹஜ் முதல் நாள் ஆகும்.
தகவல்:
www.kayalsky.com
|