ஆட்டோ வாகனம் வாங்குவதற்கு வட்டியில்லாமல் மாவட்ட சிறுபான்மை நலத்துறை மூலம் கடன் தொகை பெற்றுக்கொள்ளவியலும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையில் 85 சதவிகித தொகையை நடுவண் அரசும், 10 சதவிகித தொகையை மாநில அரசும் மானியக் கடனாக வழங்கும். எஞ்சிய 05 சதகிவித தொகைக்கு பயனாளி பொறுப்பேற்க வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பாக, இத்திட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுனர்கள் வட்டியில்லாக் கடன் அடிப்படையில் ஆட்டோ வாகனம் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட சுதந்திர தொழிலாளர் யூனியன் தலைவர் ஆர்.பி.ஷம்சுத்தீன் ஏற்பாட்டில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் எதிரில் நடத்தப்பட்ட இம்முகாமிற்கு தாய்லாந்து காயிதெமில்லத் பேரவை தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு நாஸர், செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஆசிரியர் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கடன் திட்டம் குறித்து, முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் விளக்கிப் பேசினார். பின்னர் நடைபெற்ற விண்ணப்பப் படிவம் வழங்கும் முகாமில், காயல்பட்டினத்தைச் சார்ந்த ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டு, விண்ணப்பங்களையும் விபரங்களையும் பெற்றுச் சென்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், தமிழகத்தின் பெருநகரங்களில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஆட்டோ கடன் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. |