மருத்துவ உதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள், இனி வருங்காலங்களில் ஜித்தா, தம்மாம், ரியாத் காயல் நல மன்றங்களுடன் இணைந்து பரிசீலித்து நிதியொதுக்கீடு செய்யப்படும் என சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 04.11.2010 அன்று இரவு 07.30 மணிக்கு, மன்றத்தின் பதிவு அலுவலகத்தில், ராவண்ணா ஹுஸைன் தாஜுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹரீஸ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து கூட்டத் தலைவர் உரையாற்றுகையில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் (KWAS) நகர்நலச் சேவைகள் சிறந்த முன்னுதாரணமானவை என்றும், காயல்பட்டினம் நகர மக்களால் பெரிதும் பாராட்டப்படும் சேவை என்றும் புகழ்ந்துரைத்தார்.
கூட்ட நிகழ்வுகளும், எடுக்கப்பட்ட முடிவுகளும் பின்வருமாறு:-
தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு நிதியொதுக்கீடு:
கடந்த பொதுக்குழுவிலிருந்து பெறப்பட்ட உதவிகோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுள் தகுதியுள்ள - கல்வி, மருத்துவம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக ரூ.65,000/- நிதியொதுக்கப்பட்டு, கல்வி உதவித்தொகைகள் - உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் வினியோகிக்கப்பட்டது.
இதர உதவித்தொகைகளை சிங்கை காயல் நல மன்றம் சார்பாக தனிப்பட்ட முறையில் வினியோகம் செய்த இக்ராஃ செயலர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதுக்கு இக்கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
உண்டியல் நிலுவைத்தொகை:
மன்ற உறுப்பினர்களுக்கு மன்றத்தால் வழங்கப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்தப்பட்ட தொகைகளை இதுவரை மன்ற நிர்வாகத்திடம் ஒப்படைக்காத உறுப்பினர்களிடமிருந்து அவற்றைச் சேகரிக்கும் பொறுப்பு, உறுப்பினர் உமர் ரப்பானீயிடம் வழங்கப்பட்டது.
நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பு:
மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை, மன்றப் பொருளாளர் எஸ்.எச்.அன்ஸாரீ கூட்டத்தில் சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. மன்றத்திற்கான சந்தா தொகை நிலுவையிலுள்ள உறுப்பினர்கள் தாமதமின்றி வழங்கி ஒத்துழைக்குமாறு மன்றத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
மன்றத்தின் நிதியாதாரம் பெரும்பாலும் உறுப்பினர் சந்தா தொகையை நாடியே அமைந்துள்ளதென மகுதூம் தெரிவித்தார்.
அத்தியாவசிய சமையல் பொருட்கள் வினியோகம்:
ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, நலிவுற்ற காயல்பட்டினம் குடும்பத்தினருக்கு அத்தியாவசிய சமையல் பொருட்கள் உதவியை வரும் 08ஆம் தேதியன்று, மன்ற துணைச் செயலாளர் மொகுதூம் முஹம்மதின் ஒருங்கிணைப்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த வகைக்காக உதவிகள் வழங்க விரும்பும் உறுப்பினர்கள், மேற்படி ஒருங்கிணைப்பாளரை அணுகி விபரம் தெரிவிக்குமாறும், உறுப்பினர்கள் அனைவரும் தமது சார்பாக, காயல்பட்டினத்தைச் சார்ந்த தகுதியுள்ள ஒரு பயனாளியை இத்திட்டத்தின் கீழ் உதவி பெற அறிமுகப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சஊதி மன்றங்களுடன் இணைந்து மருத்துவ விண்ணப்பங்கள் பரிசீலனை:
இனி வருங்காலங்களில் மருத்துவ உதவி கோரி மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களில், பரிசீலனைக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பங்கள், சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி மன்றம் மற்றும் ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்புகளுடன் இணைந்து பரிசீலனை செய்து, அதனடிப்படையில் நிதியொதுக்கீடு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
நிதிநிலை முன்னறிவிப்பு:
மன்றத்தின் வரவு - செலவுக்கான நிதிநிலையை முற்கூட்டியே அறிவிப்புச் செய்து விட வேண்டும் என உறுப்பினர் ஹரீஸ் கருத்து தெரிவித்தார். அவரது கருத்தை வரவேற்ற மன்றத் தலைவர், கல்வி, மருத்துவம், சிறுதொழில் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு முறைப்படி நிதியொதுக்கீடு செய்யப்படும் பொருட்டு மேற்படி நிதிநிலை முன்னறிவிப்பு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
நல்ல தேர்ச்சி பெற்றோருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை:
வரும் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவியரின் நடப்பு தேர்ச்சி குறித்து ஆழமாக ஆய்ந்தறிந்து அதனடிப்படையிலேயே அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும், தேர்ச்சி குன்றியவர்களின் விண்ணப்பங்கள் ஒப்புக்கொள்ளப்படாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆண்டுவிழா மலர்:
இவ்வாண்டு மன்றத்தால் நடத்தப்படவுள்ள ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி மன்றத்தின் சார்பில் ஆண்டு விழா மலர் வெளியிடுவதெனவும், அதற்காக சிறுகதை, செய்தித் துணுக்குகள், அனுபவக் கட்டுரைகள், நகைச்சுவைத் துணுக்குகள் என அனைத்து ஆக்கங்களையும் உறுப்பினர்கள் ஆயத்தம் செய்து ஒப்படைக்குமாறு உறுப்பினர்களை மன்றத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
வேலை தேடி சிங்கை வருவோர் முழு ஆயத்தங்களுடன் வர வேண்டும்:
வேலைவாய்ப்பு தேடி சிங்கப்பூர் வருவோர் தன்னம்பிக்கையுடனும், தமது சுய விபர மடலை (resume) தெளிவாகவும், சிங்கப்பூரிலுள்ள வேலைவாய்ப்புச் சந்தை குறித்த விபரத் தெளிவுடனும் இருப்பவர்களாக வரவழைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு வர விரும்புவோருக்கு - அவர்கள் சிங்கப்பூர் வருவதற்கு முன்பே, தேவைப்படும் துறை சார்ந்த ஒத்துழைப்புகளை வழங்க உறுப்பினர் குழு ஒன்று மன்றத்தால் நியமிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பணியாற்ற ஆங்கில பேச்சுப்புலமை மிக மிக அவசியம் என்று மன்றத் தலைவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின் நடப்பு வேலைவாய்ப்புச் சந்தை உள்ளிட்ட விபரங்களை உடனுக்குடன் தெரியப்படுத்தும் பொருட்டு, மன்றத்தின் சார்பில் தனியொரு வலைதளம் உருவாக்கப்பட வேண்டும் என ஹாஃபிழ் அஹ்மத் தெரிவித்த கருத்து ஏற்கப்பட்டு, வரும் கூட்டத்தில் அதற்கான குழு நியமிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
ஜன.20,2011இல் அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை, வரும் 2011ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 15ஆம் தேதியன்று நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு கூட்டத்தில் கருத்துப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டு, முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்ன பல அம்சங்கள் குறித்த உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, ஹாஃபிழ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீயின் துஆவுடன், இரவு 09.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரஷீத் ஜமான்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |