சென்னை வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனையில் இருதய நோய் மருத்துவ நிபுணராகப் பணிபுரியும் டாக்டர் உமாபதி இலங்கை சென்றபோது, இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) உறுப்பினர்களின் சார்பில் தேனீர் விருந்தளிக்கப்பட்டது.
31.10.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில் கொழும்பு பாலிவுட் எக்ஸ்ப்ரஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, “காவாலங்கா” தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் தலைமை தாங்கினார். காரி ஏ.டி.அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
பின்னர் தலைமையுரையாற்றிய தலைவர், டாக்டர் உமாபாரதியின் மருத்துவச் சேவையைப் பாராட்டிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொன்ட காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்தார். காவாலங்கா துணைச்செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் டாக்டர் உமாபதி பற்றி அறிமுக உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை தி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் அதிபர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா தொலைபேசி மூலம் தெரிவித்த வாழ்த்துச் செய்தி ஒலிபரப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரதம அழைப்பாளராக்க் கலந்துகொண்ட இலங்கை மேல் மாகாண ஆளுனர் ஹாஜி செய்யித் அலவி மவ்லானா, டாக்டர் உமாபதிக்கு நினைவுப்பரிசு வழங்கி சால்வை அணிவித்து, தனக்கே உரிய நகைச்சுவையுடன் வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியாக டாக்டர் உமாபதி உரையாற்றினார். அவர் தனதுரையில், காயல்பட்டினம், கீழக்கரை, பேருவளை (இலங்கை) வாசிகள் தமது அன்றாட உணவுப் பழக்கவழக்கத்தை சரிவர அமைத்துக்கொண்டால், பெரிய அளவில் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ முடியும் என்று தெரிவித்தார். தன்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் 60 சதவிகிதம் உளவியல் ஆலோசனை மூலமும், 40 சதவிகிதம் மட்டுமே மருந்துகள் மூலமும் சிகிச்சையளிப்பதாகத் தெரிவித்தார்.
இறுதியாக, காவாலங்கா பொருளாளர் ஹாஜி எஸ்.எம்.பி. செய்யித் இஸ்மாயில் நன்றி கூற, ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. காவாலங்காவின் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
A.S.புகாரீ,
துணைப் பொருளாளர்,
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா),
கொழும்பு, இலங்கை. |