தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய அங்கத்தினர் தற்சமயம் காயல்பட்டினத்தில் உள்ளனர்.
காயல் நல மன்றத்தினர் அந்தந்த நாடுகளில் இருக்கையில் மன்றம் குறித்து அதிகளவில் கலந்தாலோசனை செய்யும் அதே நேரத்தில், சொந்த ஊரில் அவ்வாறு கலந்தாலோசனை செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாதிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், உள்ளூரில் அவர்கள் விரும்பும் நேரத்தில் கலந்தாலோசனை செய்வதற்காக இடவசதி செய்துகொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கத்தினர் இன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் கலந்தாலோசனை செய்தனர்.
இக்ராஃவின் நிர்வாகச் செலவுகளுக்காக தக்வா சார்பில் வருடந்தோறும் ஒரு தொகையை ஒதுக்கீடு செய்தல், ஜகாத் நிதி மூலம் இக்ராஃ சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்காக தக்வா சார்பிலும் ஜகாத் நிதி திரட்டல், வருங்கால காயல்பட்டினம் - செயல்திட்ட முன்வடிவுக்கு ஆதரவளித்தல், புற்றுநோய் பரவல் தடுப்புக்காக நகரில் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்படவிருக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பளித்தல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், பாங்காக்கில் விரைவில் நடைபெறவுள்ள தக்வாவின் செயற்குழுக் கூட்டத்தில் இவை பரிந்துரைக்கப்படும் என்றும் தக்வா துணைத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (கரூர் ட்ரேடர்ஸ்) கூட்டத்தின் நிறைவில் தெரிவித்தார்.
தகவல்:
ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ்,
உள்ளூர் பிரதிநிதி,
தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா,
பாங்காக், தாய்லாந்து. |